குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதிக்கு உட்பட்ட அகமதாபாத் ராணிப்பில் உள்ள நிஷான் உயர்நிலைப்பள்ளியில் பிரதமர் நரேந்திரமோடி வாக்களித்தார்.
அகமதாபாத்தில் வாக்களித்த பின்னர் பிரதமர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், என் தாய்வீடான குஜராத்தில் ஜனநாயக கடமையை நிறைவேற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது சொந்த மாநிலமான குஜராத்தில் வாக்களித்துள்ளதால் நான் அதிர்ஷ்டசாலி ஆகியிருக்கிறேன் என்று தெரிவித்தார்.
அவர் மேலும், நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
வெடிகுண்டை (IED) விட வலிமையானது வாக்காளர் அட்டை. பயங்கரவாதத்தின் ஆயுதம் வெடிகுண்டு என்பதை போல ஜனநாயகத்திற்கு வலிமை சேர்ப்பது வாக்காளர் அட்டை. வாக்காளர் அடையாள அட்டையின் வலிமையை உணர்ந்து நாம் வாக்களிக்க வேண்டும். கும்பமேளாவில் புனித நீராடினால் தூய்மை அடைவதைப்போல் வாக்களிப்பதன் மூலம் வாக்காளர்கள் அதை உணரமுடியும் என்று தெரிவித்தார்.
முன்னதாக காந்திநகரில் உள்ள வீட்டிற்கு சென்று தாய் ஹீராபென்னிடம் ஆசி பெற்றார். மோடி வாக்களிக்க வந்ததை முன்னிட்டு குஜராத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.