தமிழக காவல்துறை உயரதிகாரிகள் பலரையும் இடமாற்றம் செய்யும் பட்டியலைத் தயாரித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. பொருளாதார குற்றப்பிரிவின் ஐ.ஜி.யாக இருக்கும் முருகன், தென் மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டிருக்கிறார். தூத்துக்குடி எஸ்.பி.யாக இருந்த அருண்பாலகோபாலனை மாற்றிவிட்டு, அந்த இடத்தில் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாரை நியமித்திருக்கிறார் முதல்வர். இதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன.
இதனையடுத்து காவல்துறையின் உயர் அதிகாரிகள் பலவரையும் மாற்றுவதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பட்டியலை இன்றோ அல்லது நாளையோ உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிடுவார் எனக் கோட்டை வட்டாரங்களில் எதிரொலிக்கிறது.
இது குறித்து விசாரித்த போது, "சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் ஏ.கே.விஸ்வநாதன், காவல் துறையில் டெக்னிக்கல் ஏ.டி.ஜி.பி.யாகவும், சென்னை கமிஷ்னராக ஜெயந்த் முரளி அல்லது மன்ஜுநாதா நியமிக்க வாய்ப்பு உண்டு. ஏ.டி.ஜி.பி. கந்தசாமி, சாரங்கன், ஐ.ஜி.க்கள் அன்பு, லோகநாதன், அமல்ராஜ் ஆகியோர் மாற்றப்படவிருக்கிறார்கள்.
மேலும், திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை எஸ்.பி.க்களின் பெயர்களும் இருக்கின்றன. அதேபோல, சட்ட ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக அபய்குமார் சிங், மதுரை டி.ஐ.ஜி.யாக லஷ்மி, மதுரை போலீஸ் கமிஷ்னராக சந்தோஷ்குமார் ஆகியோரை நியமிக்கவும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது " என்கிறது ஐ.பி.எஸ். வட்டாரங்கள்.