விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் தான் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று (14.06.2024) விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
இந்த இடைத்தேர்தலில் தி.மு.க சார்பாக அன்னியூர் சிவாவை வேட்பாளராக அக்கட்சித் தலைமை அறிவித்திருந்தது. இவர் தி.மு.கவின் விவசாய அணி செயலாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், நாம் தமிழர் கட்சி சார்பாக அபிநயா போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். பா.ஜ.க கூட்டணியில் உள்ள பா.ம.க விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று பா.ஜ.க அறிவித்திருந்த நிலையில், பா.ம.க சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சி அறிவித்துள்ளது.
அதன்படி, பா.ம.க நிறுவனத் தலைவர் ராமதாஸ் கூறியிருப்பதாவது, ‘விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் பா.ம.க சார்பில் சி.அன்புமணி போட்டியிடுவார்’ எனத் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சி.அன்புமணி பா.ம.க கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.