பா.ஜனதா ஆட்சி ஒரு எம்.பி. மெஜாரிட்டியில் தான் நீடிக்கிறது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடியை நிர்பந்திக்க வேண்டும் என கூறியுள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
நாங்குநேரியில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,
வடகிழக்கு மாநிலங்களில் குழப்பங்கள், தில்லுமுல்லுகளை ஏற்படுத்தியும், கோடிகளை விதைத்தும் வெற்றி பெற்று ஒட்டு மொத்த இந்தியாவையும் கைப்பற்றி விட்டோம் என்று பா.ஜனதா தலைவர்கள் கூறினர். ஆனால் உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பீகார் மாநிலங்களில் தோல்வி அடைந்தது மூலம் பா.ஜனதாவின் அடித்தளம் உடைந்து நொறுங்கி விட்டது.
கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் வெளியேறி விடும் என்பதால் மத்திய பா.ஜனதா ஆட்சி ஒரு எம்.பி. மெஜாரிட்டியில் தான் ஆட்சியில் நீடிக்கிறது. தமிழகத்தில் உள்ள 37 எம்.பி.க்கள் தயவில் தான் இனி பா.ஜனதாஆட்சி நடத்த முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடியை நிர்பந்திக்க வேண்டும்.
தேனி மாவட்டத்தில் நியுட்ரினோ திட்டம் கொண்டு வரக்கூடாது. மதுரையில் கிறிஸ்தவர்களை தாக்கியவர்களுக்கு பாதுகாப்பு அளிக்காமல் அவர்களை கைது செய்ய வேண்டும். தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. போலீஸ் இன்ஸ்பெக்டர் உதைத்ததால் பெண் பலியான சம்பவத்தில் இன்ஸ்பெக்டரை காப்பாற்றும் முயற்சியில அரசு ஈடுபட்டு வருகிறது. இது போன்ற சம்பவங்கள் அரசுக்கு எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்.
பா.ஜனதாவை அரசியலில் இருந்து ஒழிக்க அனைத்து கட்சி தலைவர்களும் ஒன்று சேரும் வாய்ப்பு உருவாகி வருகிறது. இதை நிரூபணம் செய்ய காங்கிரஸ் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மதசார்பின்மை, ஜனநாயகத்தை காக்க வழி பிறந்துள்ளது என்ற நிம்மதி ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.