
2021ல் நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பதை வரும் 7ஆம் தேதி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியும் இணைந்து அறிவிப்பார்கள் என்று அக்கட்சியின் கே.பி.முனுசாமி கடந்த மாதம் நடந்த அதிமுக செயற்குழுக் கூட்டத்திற்குப் பின்னர் அறிவித்தனர்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவு எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதேபோல் ஓ.பன்னீர்செல்வமும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோனை மேற்கொண்டார். 7ஆம் தேதி அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிப்பு வெளியாவது சந்தேகம்தான் என்று அதிமுகவினரும், அரசியல் பார்வையாளர்களும் சொல்லி வந்தநிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த மாட்டமான தேனிக்கு சென்று ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில்,
தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும்.
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!!
எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!! என குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதா நினைவிடத்தில் திடீரென அமர்ந்து தர்மயுத்தம் தொடங்கி தனக்கென ஆதரவாளர்களை திரட்டினார் ஓ.பன்னீர்செல்வம். அதேபோல் திடீரென தர்மயுத்தம் நடத்துவாரா? அதிமுகவை உடைப்பாரா உள்பட பல்வேறு விதமான விவாதங்கள் அரசியல் களத்தில் நடந்து வருகின்றன.