டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தேர்தலிலும் பா.ஜ.க. அமைப்புகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் படுதோல்வியைச் சந்தித்துள்ளனர்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சமீபத்தில் மாணவர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் இந்துத்வ அரசியல் தீவிரமடைந்து வரும் நிலையில், டெல்லி பல்கலைக் கழகத்தில் இடதுசாரி மாணவ வேட்பாளர்கள் அனைவரும் வெற்றிபெற்றனர். அதேசமயம், டெல்லி பல்கலைக்கழகத் தேர்தலில் ஏ.பி.வி.பி. மாணவ அமைப்பினர் வாக்குப் பெட்டிகளை சூறையாடி கலவரத்தில் ஈடுபட்டது சர்ச்சைக்குள்ளானது.
இந்நிலையில், கடந்த நவம்பர் 1ஆம் தேதி ஜே.என்.யூ. பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்துக்கான தேர்தல் நடைபெற்றது. 91% வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிக்கப்பட்டு முடிவுகள் வெளியாகின. அதில் இடதுசாரி வேட்பாளர்கள் அனைவரும் வெற்றிபெற்றனர். இதன்மூலம், பா.ஜ.க. அமைப்பு வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்துள்ளனர்.
முன்னதாக, ஜே.என்.யூ. பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் - ஆசிரியர்களின் விவாதங்கள், கலாச்சார கூடுகைகள், முற்போக்கு நிகழ்வுகள் உள்ளிட்ட பலவற்றை சீர்குலைக்கும் முயற்சிகள் நடக்கின்றன. பல்கலைக் கழகத்தின் சட்டவிதிகள், மாண்பு குறையாமல் பாதுகாக்கவும், இனவாத அரசியலுக்கு எதிராகவும் எங்களுக்கு வாக்களியுங்கள் என இடதுசாரி வேட்பாளர்கள் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்தலின் மூலம் ஆசிரியர் சங்கத் தலைவராக அதுல் சூத், செயலாளராக அமித் பரமேஷ்வரம், பொருளாளராக ராகேஷ் குமார் உள்ளிட்டோரும், ஒரு இணைச் செயலாளர், இரண்டு துணைத் தலைவர் பதவிகளையும் இடதுசாரி வேட்பாளர்கள் தட்டிச் சென்றனர்.