மு.க.ஸ்டாலினை சந்திக்க நான் மறுப்பு தெரிவிக்கவில்ல, ஊடக பரபரப்புக்காக அவர் நாடகமாடுகிறார் என முதல்வர் எடப்பாடி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அவர்,
இன்று காலை 11 மணிக்கு சட்டப்பேரவை தலைவர் அறையில் அலுவல் கூட்டம் நடைபெறுவதாக அறிவிப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, அந்த அலுவல் கூட்டத்தில் நான், துணைமுதல்வர் உட்பட எதிர்கட்சி தலைவர், காங்கிரஸ் தலைவர் என அனைவரும் கலந்து கொண்டோம். எனக்கு எதிரில் தான் எதிர்கட்சி தலைவர் அமர்ந்திருந்தார். என்னிடம் அப்போதே மனுவை அளித்திருக்கலாம். இல்லையென்றால் என்னை தனியாக சந்திக்க வேண்டும் என கூறியிருக்கலாம்.
ஆனால் இதையெல்லாம் செய்யமால், சிறிது நேரம் சட்டப்பேரவை தலைவர் அறையில், அலுவல் கூட்டத்தில் அமர்ந்துவிட்டு சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிவிட்டார். நாங்கள் ஒரு 15 நிமிடம் கழித்து தொலைக்காட்சிகளை பார்த்தோம். அப்போது முதலமைச்சரை பார்க்க மு.க.ஸ்டாலின் அனுமதி கோரி நான் அனுமதிக்க மறுத்ததாகவும் அவர் என்னுடைய அறைக்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டர் என்ற செய்தியை பார்க்கிறோம்.
தவறான செய்தியை திட்டமிட்டு பரப்புகிறார். சட்டப்பேரவை தலைவர் அறையில் அலுவல் கூட்டம் நடந்த போது நானும் இருந்தேன் அவரும் இருந்தார். அப்போதே என்னை சந்தித்திருக்கலாம். ஆனால் அதை தவிர்த்துவிட்டு ஊடக பரபரப்புக்காக, ஊடக வெளிச்சத்துக்காக மு.க.ஸ்டாலின் நாடகமாடுகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.