நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
அந்த வகையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, தேமுதிக உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக ராஜீவ் குமார், ஆணையர்களாக அனுப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் பதவி வகித்து வந்தனர். அருண் கோயல் தனது ஆணையர் பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் தேர்தல் ஆணையர் காலி இடங்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது. தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார். அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளார். அருண் கோயலின் பதவிக் காலம் 2027 ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில், திடீரென ராஜினாமா செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.