போக்குவரத்துத் துறையில், சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். அதே சமயம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட்12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர். இதற்கிடையே இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில்பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது.
இத்தகைய சூழலில் செந்தில்பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து முதல்வர் அலுவலகத்திற்கு நேற்று கடிதம் அனுப்பி இருந்தார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு செந்தில்பாலாஜி எழுதியிருந்த கடிதத்தில், “தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்கிறேன். தங்களது தலைமையின் கீழ் மக்களுக்கு பணியாற்ற வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. நீதிக்காகப் போராட தனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி. தான் நிரபராதி, உண்மையைக் வெளிக் கொண்டு வர சட்ட ரீதியாக தொடர்ந்து போராடுவேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (12.02.2024) தமிழ்நாடு அமைச்சர் செந்தில்பாலாஜியின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ள பரிந்துரைத்து கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தின் பரிந்துரையின் அடிப்படையில் ஆளுநர் ஆர்.என். ரவி அங்கீகரித்து செந்தில்பாலாஜியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளார்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சுமார் ஏழு மாதங்களுக்கு மேலாக செந்தில்பாலாஜி, ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை அமர்வு நீதிமன்றம், உயர்நீதி மன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.