அண்மையில் சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்தவை ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் என உச்சநீதிமன்றம் தனது கடும் கண்டனத்தை வெளிப்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் மீண்டும் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சண்டிகர் மாநகராட்சி மேயர், மூத்த மேயர், துணை மேயர் ஆகிய பதவிகளுக்கான வாக்குப்பதிவு, பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி கடந்த 30-01-24 அன்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில், இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து பா.ஜ.க.வை எதிர்த்துப் போட்டியிட்டன. அதன்படி, ஆம் ஆத்மியை சேர்ந்த குல்தீப் குமாரும், பா.ஜ.க.வை சேர்ந்த மனோஜ் சோங்கரும் மேயர் பதவிக்கு போட்டியிட்டனர். மேலும், மூத்த துணை மேயர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் குர்பிரீத் சிங்கும், பா.ஜ.க.வைச் சேர்ந்த குல்ஜீத் சந்தும் போட்டியிட்டனர். துணை மேயர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளர் நிர்மலா தேவியை எதிர்த்து பா.ஜ.க சார்பில் ராஜிந்தர் சர்மா போட்டியிட்டார்.
காலை வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், பிற்பகல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் மொத்தமுள்ள 36 ஓட்டுகளில், 16 ஓட்டுகள் பெற்று பா.ஜ.க வேட்பாளர் மனோஜ் சோங்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும், இதில் ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் குல்தீப் குமாருக்கு கிடைத்த 20 வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. இதனையடுத்து, பா.ஜ.க குறுக்கு வழியில் வெற்றி பெற்றதாக ஆம் ஆத்மி கடுமையாக விமர்சனம் செய்து குற்றம்சாட்டியது. இந்த நிலையில் சண்டிகர் மேயர் தேர்தல் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வீடியோ ஆதாரங்களுடன் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் பல்வேறு கேள்விகளை உச்சநீதிமன்றம் எழுப்பியது.
தேர்தலை நடத்தும் விதம் இதுதானா? என சண்டிகர் மேயர் தேர்தல் நடத்திய அதிகாரிக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், தேர்தல் என்ற பெயரில் அங்கு நடந்த செயல் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல். வாக்கு சீட்டுகளை தேர்தல் அதிகாரி திருத்தி தில்லுமுல்லு செய்தது வெளிப்படையாகத் தெரிகிறது. ஜனநாயகத்தை படுகொலை செய்வதை அனுமதிக்க முடியாது. சண்டிகர் மேயர் தேர்தலில் ஜனநாயகப் படுகொலை நடந்திருப்பதைப் பார்த்து மிகவும் வேதனைப்படுகிறோம். தேர்தல் அதிகாரி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்து சண்டிகர் மாநகராட்சி மன்றக் கூட்டத்தை ஒத்தி வைக்க உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம்.
இன்று இந்த வழக்கில் நடைபெற்ற விசாரணையில், சண்டிகர் மேயர் தேர்தலில் தில்லுமுல்லு செய்தது உறுதி செய்யப்பட்டதால் தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிமன்றம், அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. எந்த ஒரு கட்சியையும் சாராத புதிய தேர்தல் அதிகாரியை நியமித்து உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் மீண்டும் வாக்கு சீட்டுகளை எண்ணி முடித்து முடிவை உச்சநீதிமன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.