Skip to main content

குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது!

Published on 14/12/2024 | Edited on 14/12/2024
A low pressure area is forming

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. இதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. அதே சமயம் கனமழை காரணமாகத் திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் செயல்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (14.12.2024) ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விழுப்புரம், தேனி, சிவகங்கை மற்றும் திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கனமழை காரணமாகத் திருநெல்வேலியில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த பருவத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இன்று ஒத்திவைக்கப்பட்ட பருவ தேர்வுக்கான மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனப் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற கல்லூரிகளிலும் இன்று நடைபெறவிருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அந்தமான் கடலின் மத்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இது 24 மணி நேரத்தில் அதாவது நாளை (15.12.2024) குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும். அதன் பின்னர், 17ஆம் தேதி வாக்கில் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால், 17ஆம் தேதி தமிழகத்தில் 12 செ.மீ. முதல், 20 செ.மீ. வரையிலான மழைக்கு வாய்ப்பு உள்ளது. எனவே மிகக் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்