நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அபார வெற்றிபெற்ற திமுக கூட்டணி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. தமிழகத்தின் முதல்வராக முதன்முறையாக மு.க. ஸ்டாலின் பதவியேற்றார்.
இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி 75 சட்டமன்றத் தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. இதில் அதிமுக மட்டும் 66 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிபெற்றது. இந்த நிலையில், கடந்த மே 7ஆம் தேதி அன்று மாலை கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் தேர்வு குறித்து நீண்ட நேரம் ஆலோசிக்கப்பட்ட நிலையில், எந்த முடிவும் எட்டப்படாமல் கூட்டம் முடிவடைந்தது.
இந்த நிலையில், இன்று (10/05/2021) காலை 09.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மீண்டும் நடைபெற்றது. இந்தக் கூட்டம் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த நிலையில், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தமிழக எதிர்க்கட்சித் தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து அதிமுகவின் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏக்கள் ஆக தேர்வானதை அடுத்து எம்.பி பதவியில் இருந்து இருவரும் விலகியுள்ளனர். வேப்பனஹள்ளி தொகுதியில் இருந்து கே.பி.முனுசாமியும், ஒரத்தநாடு தொகுதியில் இருந்து வைத்திலிங்கமும் போட்டியிட்டு வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.