தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடந்தது. வரும் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்தநிலையில், வாக்கு எண்ணிக்கை நடக்கும் மையத்தில் பாதுகாப்பு குறைவாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார்கள் கொடுத்திருக்கின்றன.
மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடுக்கு வாய்ப்பில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார். மேலும், மே 2ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் எனவும் கூறினார்.
இதனிடையே தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து, ஊடகக் கருத்துக் கணிப்புகளும், புலனாய்வு அமைப்புகளின் கணிப்புகளும் திமுகவுக்கே சாதகமாக இருப்பது குறித்து டெல்லி பாஜக மேலிடம் ஆலோசனை செய்திருக்கிறது. இதை எப்படி சாதகமாக்குவது என்பது குறித்தும் ஒருபக்கம் ஆலோசனை நடந்திருக்கிறது. எல்லாவற்றையும் மீறி திமுக வெற்றிபெற்றுவிட்டால், டி.ஆர்.பாலு, திருச்சி சிவா போன்ற அனுபவமிக்க திமுக எம்.பிக்கள் மூலம், திமுக தலைமையை அணுகலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம். அதிமுகவுக்கு பாதகமான முடிவு வந்தால், அங்கேயுள்ள பிரமுகர்கள் சிலர் பாஜகவில் இணையலாம் என்கிற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. தளவாய் சுந்தரம் மூலம் ஒருங்கிணைக்கலாம் என்று ஆலோசிக்கப்படுகிறதாம். தேர்தல் முடிவில் மெஜாரிட்டி முன்னே, பின்னே இருந்தால், திமுக எம்.எல்.ஏ.க்களை எப்படி தூக்கலாம் என்றும் டெல்லி பாஜக வியூகம் வகுத்துக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.