Skip to main content

திணறும் தமிழக காவல்துறை!- துணை ராணுவத்திற்கு கிரிஜா வைத்தியநாதன் அழைப்பு!

Published on 23/05/2018 | Edited on 23/05/2018
pl


 

 

தூத்துக்குடி போராட்டத்தை ஒடுக்க முடியாமல் தமிழக போலீசார் திணறி வருவதால் துணை ராணுவத்தை அனுப்ப மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நடைப்பெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 10பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

 

 


இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை உயிரிழந்தவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை வளாகத்தில் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். மருத்துவமனை பகுதியில் திரண்டவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி காவல்துறையினர் கலைத்தனர். போலீசாரின் தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்தனர். இதில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டது. மற்றொரு பேருந்தின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டது.

 

 


இதைத்தொடர்ந்து இன்று பிற்பகல் அண்ணாநகர் பகுதியில் போலீசார் போராட்டகாரர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது பொதுமக்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மற்றும் 10க்கும் மேற்பட்ட போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. பொதுமக்களின் கல்வீச்சை தொடர்ந்து போலீசார் இன்று மீண்டும் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். போலீசாரின் துப்பாக்கி சூட்டில் காளியப்பன் (22) என்ற இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தூத்துக்குடியில் போராட்டத்தை ஒடுக்க முடியாமல் தமிழ்நாடு போலீசார் 2வது நாளாக தொடர்ந்து திணறி வருவதால் துணை ராணுவத்தை அனுப்ப மத்திய அரசுக்கு தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து துணை ராணுவத்தை அனுப்ப மத்திய அரசு முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சார்ந்த செய்திகள்