தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் கடந்த மார்ச் 27 ஆம் தேதி (27.03.2023) தமிழ்நாடு சட்டமன்றத்தில் மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு ஆண்டிற்கு ரூபாய் 12,000/- உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் அவர்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் உயரிய நோக்கம் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டது
இதையடுத்து தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி (24.07.2023) தொடங்கி வைத்தார்.
மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ், முகாம்களில் விண்ணப்பித்து கள ஆய்வு நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு, தற்போது புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள 7 இலட்சத்து 35 ஆயிரம் பயனாளிகளுக்கும் ஏற்கனவே, வழங்கப்பட்டு வரும் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுடன் சேர்த்து, மொத்தம் 1 கோடியே 13 இலட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு, நவம்பர் மாதத்திற்கான உதவித் தொகையினை இன்று (10.11.2023) வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இத்திட்டத்தில் தற்போது இணைந்துள்ள 7 லட்சத்து 35 ஆயிரம் மகளிர் உள்ளிட்ட பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்கிடும் விழா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், இன்று (10-11-2023) காலை 10.30 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் இன்றைய தினமே (10.11.2023) அமைச்சர்கள் தலைமையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விழா நடைபெறவுள்ளது.