Skip to main content

“நியூசிலாந்து செய்ததை இந்தியாவும் முயற்சிக்கலாமே” - அன்புமணி புதிய யோசனை

Published on 10/12/2021 | Edited on 10/12/2021

 

"India can try what New Zealand did" - Anbumani

 

நியூசிலாந்து அரசு தனது நாட்டில் புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டையும், புகைப்பழக்கத்தையும் மொத்தமாக ஒழித்திடும் வகையில் புதிய சட்டத்தை கொண்டுவரவிருக்கிறது. இதுகுறித்து பாமக இளைஞர் அணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

அதில் அவர், “நியூசிலாந்தில் உடனடியாக  இளைஞர்களிடமும், ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளில் ஒட்டுமொத்த சமுதாயத்திலும் புகைப்பிடிக்கும் வழக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சட்டத்தை இயற்ற நியூசிலாந்து அரசு  தீர்மானித்திருக்கிறது. இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால், அது புகைப்பழக்கத்தையும், புகையிலைப் பொருட்கள் பயன்பாட்டையும் ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட மிகச்சிறந்த ஆயுதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 

குடிமக்களின் நல்வாழ்வில் மிகுந்த அக்கறை செலுத்தும் நாடுகளில் நியூசிலாந்து குறிப்பிடத்தக்கதாகும். நியூசிலாந்தில் புகைப்பழக்கத்தையும், புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டையும் முடிவுக்குக் கொண்டுவர  அந்நாட்டு அரசு பல ஆண்டுகளாகவே நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, 2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த எவருக்கும் சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்களை விற்பதற்கு தடை விதிக்கும் சட்டத்தை இயற்ற அந்நாடு தீர்மானித்துள்ளது. 2004-ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்களுக்கு மட்டும் புகைப்பிடிக்கத் தடை விதிக்கும் சட்டத்தை இயற்றலாம் என்று கடந்த ஏப்ரல் மாதத்தில் திட்டமிட்டிருந்த நியூசிலாந்து அரசு, இப்போது 2008-ஆம் ஆண்டு வரை பிறந்தவர்களுக்கும் தடையை நீட்டிக்கவிருக்கிறது.

 

நியூசிலாந்து அரசின் புதிய சட்டம் 2022-ஆம் ஆண்டு தொடக்கத்தில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வரும். இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், 14 வயதுக்கும் கீழ் உள்ள எவரும் இனி எந்தக் காலத்திலும் புகைப்பிடிக்க முடியாது. இந்தச் சட்டம் இயற்றப்படும் போது 18 வயதுக்கும் கூடுதலாக இருப்பவர்கள் புகைப் பிடிக்கலாம் என்றாலும் கூட, அவர்களுக்கு விற்பனை செய்யப்படும் சிகரெட்டுகளில் நிகோட்டின் அளவு மிகவும் குறைவாக இருக்க வேண்டும் என்பதை சட்டம் உறுதி செய்யும். அதேபோல், சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளின் எண்ணிக்கையை ஆண்டுக்கு ஆண்டு குறைக்கவும் அச்சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகளால் 2025-ஆம் ஆண்டுக்குள் நியுசிலாந்தில் புகைப்பிடிப்பவர்களின் 5 விழுக்காட்டுக்கும் கீழாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

அதுமட்டுமின்றி, அடுத்த சில ஆண்டுகளில் நியூசிலாந்தில் புகைப்பிடிப்பவர்கள், புகையிலைப் பொருட்களை பயன்படுத்துபவர்களே இருக்க மாட்டார்கள். இப்படி ஒரு சூழலை நினைத்துப் பார்க்கவே மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. இதே போன்ற சூழல் தமிழ்நாடு உட்பட இந்தியாவிலும் ஏற்படுத்தப்பட்டால் எப்படி இருக்கும்? என்ற வினா நமது இதயத்தில் இயல்பாக எழுகிறது. இன்னும் கேட்டால் புகையிலைக்கு தடை விதிப்பதற்கான தேவை நியூசிலாந்து நாட்டை விட இந்தியாவில் பல மடங்கு அதிகமாக உள்ளது.

 

நியூசிலாந்து நாட்டில் 5 லட்சம் பேர் மட்டும் தான் புகைப்பிடிக்கின்றனர்; அவர்களில் ஆண்டுக்கு 4500 பேர் உயிரிழக்கின்றனர். இது ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு தான். எனினும், அங்கு புகையிலை பொருட்கள் முழுமையாக தடை செய்யப்படுகின்றன. ஆனால், இந்தியாவில் 12 கோடி பேர் புகைப்பிடிக்கிறார்கள். அவர்களில் ஒவ்வொரு ஆண்டும் 13 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். அப்படியானால், இந்தியாவில் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டியத் தேவை எவ்வளவு அதிகம் என்பதை உணரலாம்.

 

உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி, இந்தியாவில் 18 வயதைக் கடந்த ஆண்களில்  25 விழுக்காட்டினரும், பெண்களில் 15 விழுக்காட்டினரும் புகைப்பிடிப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஆண்களில் ஐந்தில் ஒருவரின் உயிரிழப்புக்கும், பெண்களில் இருபதில் ஒருவரின் இறப்புக்கும் புகையிலை தான் காரணமாக உள்ளது. இந்தத் தீமைகளை கருத்தில் கொண்டு தான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றிய காலத்தில் பொது இடங்களில் புகைப்பிடிக்கத் தடை, திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகளின் போது எச்சரிக்கை வாசகம், புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது எச்சரிக்கைப் படங்கள் உள்ளிட்ட ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டேன். அது சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆனாலும், புகையிலையின் தீய தாக்கங்களில் இருந்து இந்தியா இன்னும் முழுமையாக விடுபடவில்லை. எனவே, நியூசிலாந்து மேற்கொள்வதைப் போல புகையிலைக்கு எதிராக துணிச்சலான நடவடிக்கைகள் இந்தியாவில் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தியாவில் புகைப் பிடிப்பதற்கான வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்துவதற்கான சட்டம் தயாரிக்கப்பட்டு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. அந்த சட்டத்தை உடனடியாக நிறைவேற்றுவது மட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் புகைப்பிடிப்பதற்கான வயது வரம்பை ஓராண்டு நீட்டிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் இப்போது 18 வயது மற்றும் அதற்கும் கீழ் இருப்பவர்கள் தமது வாழ்நாளில் புகைப்பிடிக்க முடியாது. அதனால் இந்தியாவிலும் புகைப்பிடிக்காத இளைய தலைமுறை உருவாகும்.

 

எனவே, இந்தியாவில் புகைப்பிடிப்பதையும், புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதையும் கட்டுப்படுத்த சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மேகதாது விவகாரத்தில் முதல்வர் வாய் திறக்காதது ஏன்? - அன்புமணி

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Anbumani question Why is cm stalin not talking about the Mekedatu issue?

மோசடி செய்தாவது மேகதாது அணையை கட்டுவோம் என சிவக்குமார் கொக்கரிக்கிறார்; ஆனால் மு.க. ஸ்டாலின் வாயை திறக்காதது ஏன்? என பாமக தலைவர் அன்புமணி ராம்தாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை நல்ல வழியிலோ, மோசடி செய்தோ கட்டியே தீருவோம்; அதன் மூலம் பெங்களூரு நகரத்திற்கு காவிரி நீரை வழங்குவோம் என்று கர்நாடக துணை முதலமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார். ஆனால், அதைக் கண்டிக்கக் கூட முன்வராமல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதி காப்பது, காங்கிரஸ் கூட்டணிக்காக தமிழ்நாட்டின் காவிரி ஆற்று உரிமையை அடகு வைத்து விட்டாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பெங்களூரு (ஊரகம்) மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் தமது சகோதரர் டி.கே.சுரேஷை ஆதரித்து அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புவாசிகளிடம் பரப்புரை மேற்கொண்ட கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்,‘‘உங்களுடன் நான் பிசினஸ் டீல் பேச வந்திருக்கிறேன். நீங்கள் எனது சகோதரர் சுரேஷை வெற்றி பெறச் செய்தால், அவர் உங்களுக்கு காவிரியிலிருந்து குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வார்’’ என்று பேசியிருக்கிறார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து  செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவக்குமார்,‘‘நல்ல வழியிலோ அல்லது மோசடி செய்தோ மேகதாது அணையைக் கட்டி, அங்கிருந்து பெங்களூரு நகருக்கு குடிநீர் கொண்டு வருவோம் என்பதை அங்குள்ள மக்களுக்கு தெரிவிப்பதற்காகவே அவ்வாறு கூறினேன்’’ என்று விளக்கமளித்துள்ளார். மேகதாது அணை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சூழலில், மோசடி செய்தாவது  மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் கொக்கரிக்கிறார் என்றால், அணையை கட்டும் விஷயத்தில் எந்த அளவுக்கு தீவிரமாக இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு அனுமதிக்காமல் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது உள்ளிட்ட எந்த அணையையும் கர்நாடகம் கட்ட முடியாது. அதைக் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பும், உச்சநீதிமன்றமும் அனுமதிக்காது என்பது அனைவரும் அறிந்த செய்தி. ஆனாலும் கூட மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும், துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாரும் மாறி மாறி கூறி வருகின்றனர். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது மட்டுமின்றி, தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையிலான நல்லுறவுக்கு வேட்டு வைக்கும் செயலாகும். இதை தமிழர்களால் சகித்துக் கொள்ள முடியாது.

கர்நாடக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் பேச்சுகள் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரானவை என்பது தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கும் விவசாயிக்குக் கூட தெரிகிறது. ஆனால், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இது குறித்து எதுவுமே தெரியாதது தான் வியப்பாகவும், வேதனையாகவும் இருக்கிறது. உலகில் நடக்கும் சாதாரண நிகழ்வுகளுக்கு எல்லாம் கருத்து தெரிவிக்கும் அவர், தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் வராமல் தடுக்கும் வகையில் மேகதாது அணையை கட்டுவோம் என்று கர்நாடக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அதுகுறித்து எதுவுமே கருத்து தெரிவிக்காமல் வாய் மூடி மவுனியாக இருப்பதன் மர்மம் என்னவென்று தெரியவில்லை.

மேகதாது அணை விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கனத்த அமைதியை வைத்துப் பார்க்கும் போது, தமிழ்நாடு அரசை அமைதிப் படுத்தி விட்டு, மேகதாது அணையை கட்டுவதைத் தான், மோசடி வழியிலாவது பெங்களூருக்கு தண்ணீர் கொண்டு செல்வது என்று டி.கே.சிவக்குமார் கூறுகிறாரோ? என்ற ஐயம் எழுகிறது. திமுக அரசோ, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களோ இந்த ஐயத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பது தான் வருத்தமளிக்கும் உண்மை.

1970-ஆம் ஆண்டுகளில் கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் தான் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே 4 அணைகள் கட்டப்பட்டன. ஆனாலும், அவரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக  தமிழகத்தின் உரிமைகளை தாரைவார்த்து காவிரியின் குறுக்கே அணைகள் கட்டப்படுவதை கண்டுகொள்ளாமல் இருந்தார். 2008-ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக  ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை அப்போதைய முதலமைச்சர் கலைஞர்  நிறுத்தி வைத்தார். அவர் வழியில் வந்த மு.க.ஸ்டாலின், இப்போது மேகதாது அணை கட்டும் விவகாரத்தில், கர்நாடகத்துக்கு ஆதரவாக தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறார்.

எப்போதெல்லாம் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறதோ, எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சியுடன்  கூட்டணியில் இருக்கிறதோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் காவிரி உரிமைகளை கர்நாடகத்திற்கு தாரை வார்ப்பது திமுகவின் வழக்கம். இப்போதும் காங்கிரஸ் கட்சியுடனான உறவுக்காக மேகதாது அணை கட்டும் விவகாரத்தில்  தமிழ்நாட்டின் உரிமைகளை திமுக அரசு அடகு வைத்து விடக் கூடாது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால், அதன்பிறகு காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். அதை உணர்ந்து மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்க வேண்டும். நல்ல வழியிலோ, மோசடி வழியிலோ மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கூறி வரும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முதலமைச்சர் சித்தராமையா ஆகியோரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

'மாமன்னன் படத்தில் நடித்தால் மட்டும் போதாது'-அன்புமணி ராமதாஸ் கடும் விமர்சனம்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட பாமகவின் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''விளையாட்டு துறை அமைச்சர்  இன்னும் விளையாட்டு பிள்ளையாகவே இருக்கிறார். அதற்கு மேல் வளர மாட்டேன் என்கிறார். தர்மபுரியில் வந்து பேசிவிட்டு போகிறார். என்னுடைய தந்தை முதலமைச்சர்  உறுதியாக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க சட்ட போராட்டம் நடத்துவார் என்று சொல்லியுள்ளார். உங்களுக்கும் சட்டத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கு. முதலமைச்சர் எதுக்கைய்யா சட்ட போராட்டம் நடத்த வேண்டும். கையெழுத்து போட வேண்டும் அவ்வளவு தானே.

கையெழுத்து போடும் அதிகாரம் உங்களுக்கு இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் ஒரு மிகப்பெரிய தீர்ப்பை கொடுத்திருந்தார்கள். அந்த தீர்ப்பில் தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்க எந்த தடையும் கிடையாது. தரவுகளை சேகரித்து நீங்கள் அதை நியாயப்படுத்தி உள் ஒதுக்கீடு கொடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அதன்பிறகு என்ன உங்களுக்கு சட்ட போராட்டம் இருக்கிறது. தரவுகள் எங்கே இருக்கிறது? தரவுகள் கம்ப்யூட்டரில் இருக்கிறது. கம்ப்யூட்டரில் டவுன்லோட் செய்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும். ஒரு மணி நேரமாகும். நான் முதலமைச்சராக இருந்தேன் என்றால் ஒரு மணி நேரத்தில் கையெழுத்து போட்டுவிடுவேன். தேர்தல் வந்தால் மட்டும் வன்னியர்களை பற்றி ஞாபகம் வரும்; தேர்தல் வந்தால் மட்டும் தலித்துகளை பற்றி ஞாபகம் வரும். மாமன்னன் படத்தில் நடித்தால் போதுமா? பட்டியலின மக்களுக்கு நீங்கள் மரியாதை கொடுக்க வேண்டாமா? தெரிந்தால் தானே மரியாதை கொடுப்பீர்கள். இது சினிமா அல்ல இது வாழ்க்கை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமிழ்நாட்டிலேயே அதிகமாக செய்த கட்சி பாமக தான்'' என்றார்.