
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
இந்நிலையில் பாஜகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியில் இணைவதாக கட்சியின் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கான காரணம் குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், ''நேற்று மாலை பாஜகவினுடைய தமிழக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 30 நிமிடம் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் பேசினோம். மேலும் நாளைய தினம் வருகின்ற 27 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பாஜக தலைவர், என்னை கலந்துகொள்ள வேண்டும் என என்னிடம் நேரில் அழைப்பு விடுத்தார்.