மணல் குவாரி தொடர்பாக 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், “குவாரிகளில் மணல் எடுக்கும் விவகாரம் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் வராது. தனது அதிகார வரம்பை மீறி அமலாக்கத்துறை செயல்படுகிறது. மாநில அரசின் அனுமதி இல்லாமல் அமலாக்கத்துறை மேற்கொள்ளும் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அமலாக்கத்துறைக்கு எதிராகத் தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (27.11.2023) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜரானர். அவர் வாதிடுகையில், “மாநில அரசின் வழக்குகளில் மத்திய அரசு தலையிடுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்களை எதிர்த்து வழக்குகளை தாக்கல் செய்ய அதிகாரம் உள்ளது. மணல் குவாரி விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த அதிகாரம் இல்லை. அமலாக்கத்துறையின் நடவடிக்கை இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையான கூட்டாட்சி மீதான தாக்குதலாகும்.
கனிம வள வழக்குகளை மாநில அரசு விசாரணை நடத்தலாம். பாஜக ஆளும் மாநிலங்களில் எந்த நடவடிக்கையும் இல்லை. பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாவட்ட ஆட்சியாளர்களுக்கு சம்மன் அனுப்புவதன் மூலம் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சங்கட்த்தை ஏற்படுத்துகிறது. யாருக்கு வேண்டுமானாலும் சம்மன் அனுப்பும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு இல்லை. சம்மன் அனுப்பு முடியாது. மாறாக உதவி செய்ய வருமாறு கோரிக்கை அல்லது அழைப்பை அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை விடுக்கலாம். மாவட்ட ஆட்சியர்களிடம் விசாரணை நடத்தும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு கிடையாது. இந்த வழக்கின் மூலம் மத்திய அரசின் அதிகார எல்லை தொடர்பான தீவிரமான கேள்வி எழுகிறது” வாதத்தை முன் வைத்தார்.
அமலாக்கத்துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் ஆஜராகி வாதிட்டார். அவர், ஆரம்ப கட்டத்திலேயே மாவட்ட ஆட்சியாளர்களின் மனுவை எதிர்த்தோம். 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. எனவே அதனை விசாரிக்க அதிகாரம் உள்ளது” என தெரிவித்தார். அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், “குற்றத்தை கண்டுப்பிடித்துவிட்டீர்களா” கேள்வி எழுப்பினர். அதற்கு, “ மோசடி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தான் அமலாக்கட்துறை விசாரணை நடத்துகிறது” எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் நாளை (28.11.2023) உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. சமீபத்தில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.