தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மொத்தம் உள்ள 62 சுங்கச்சாவடிகளில் 7 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த 7 சுங்கச் சாவடிகளில் குறைந்தபட்சம் 5 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரை கட்டண உயர்வு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் ஒரு வழிப் பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணம் ஆகியவற்றுக்கான கட்டணம் ஐந்து ரூபாய் முதல் முப்பது ரூபாய் வரையிலும், மாதாந்திர கட்டணம் 100 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரை உயரும் எனவும் கூறப்பட்டது. சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவது குறித்து வாகன உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளதோடு, காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளதாகவும் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையே, மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து, நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு முடிவைத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திரும்பப் பெற்றது. மேலும், சுங்கச்சாவடி கட்டண மாற்றம் இரண்டு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வந்த 18வது மக்களவைத் தேர்தல் இன்று (01-06-24) மாலையுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், வருகிற ஜூன் 3ஆம் தேதி அதிகாலை 12 மணி முதல் சுங்கச்சாவடி கட்டணம் மாற்றம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.