இந்த ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வந்தனர்.
இதற்கிடையே, நான்கு கட்டங்களாக இந்தியா கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்த நிலையில், ஆம் ஆத்மி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் காங்கிரஸின் 5 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய கூட்டணிக் குழு தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வந்தது. அதில், நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் கடந்த 24 ஆம் தேதி அறிவித்தது. இது குறித்து பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை. இங்கு பா.ஜ.க.வை தனித்து நின்று தோற்கடிப்போம். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் ஒரு அங்கமாக உள்ளது” என்று தெரிவித்தார். அதேபோல், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, ஐக்கிய ஜனதா தளக் கட்சித் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ்குமார், இந்தியா கூட்டணியில் இருந்து விலகி, கடந்த 28ஆம் தேதி காலை தனது பதவியை ராஜினாமா செய்து, மாலையில் பா.ஜ.க ஆதரவுடன் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார். மேலும், அவருடன் எட்டு பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர். கடந்த 18 மாதங்களில் இரண்டாவது முறையாக அணி மாறியுள்ள நிதிஷ்குமார், தற்போது ஒன்பதாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றுள்ளார். இது பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியில் இருந்து விலகியதற்கு அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் இருந்து விலகியது ஏன்? என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து இன்று (31-01-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய நிதிஷ்குமார், “கூட்டணிக்கு வேறு பெயரை தேர்வு செய்ய வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தி இருந்தேன். ஆனால், அவர்கள் அந்த பெயரை முடிவு செய்தனர். நான் கூட்டணியை மேம்படுத்த மிகவும் கடினமாக முயற்சி செய்தேன். ஆனால், அவர்கள் கூட்டணியை மேம்படுத்த ஒன்று கூட செய்யவில்லை. எந்த கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை இன்று வரை அவர்கள் முடிவு செய்யவில்லை. இது போன்ற சில முரண்பாடுகள் ஏற்பட்டதால் அந்த கூட்டணியில் இருந்து விலகி முதலில் யாருடன் இருந்தேன் என்று திரும்பி வந்தேன். நான் பீகார் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்” என்று கூறினார்.