அமமுகவை தொடங்கிய டிடிவி தினகரன், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வராது என்றே கூறி வந்தார். 2021 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி என அறிவித்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட தொடங்கினார். ஆனால் பின்னர் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார்.
எதிர்பாராத விதமாக, சேந்தமங்கலம் தொகுதி அமமுக வேட்பாளரும், நாமக்கல் மாவட்ட துணைச் செயலாளரருமான கொல்லிமலை பி.சந்திரன் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். இதேபோல் புதுச்சேரியில் உள்ள திருநள்ளாறு தொகுதியின் அமமுக வேட்பாளர் தர்பாரண்யேஸ்வரன் பாஜகவில் இணைந்தார். தேர்தலுக்குப் பத்து நாட்களே உள்ள நிலையில் இரண்டு வேட்பாளர்கள் கட்சியைவிட்டே போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தேர்தலில் கவனம் செலுத்தினார் தினகரன்.
கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவும் அமைச்சருமான கடம்பூர் ராஜூவை எதிர்த்து போட்டியிட்ட டிடிவி தினகரன், மாணிக்கராஜாவின் கடும் உழைப்பு காரணமாக, தான் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளார். கடம்பூர் ராஜூவோ தான்தான் வெற்றிபெறுவேன் என்று கூறி வருகிறார்.
தேர்தல் முடிந்ததும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார் டிடிவி தினகரன். அப்போது, அவர்கள் ஒரு பட்டியலைக் கொடுத்து இத்தனை இடங்களில் வெற்றிபெறுவோம் என்று சொல்லியுள்ளனர். ஆனால் தினகரன் அதனை நம்பவில்லை. மூன்று தொகுதிகள் வரை வரும் என்று நம்பிக்கை வைத்துள்ளாராம். இதில், தான் போட்டியிட்ட கோவில்பட்டி மற்றும் பாபநாசம், பாப்பிரெட்டிபட்டி, திருவாடானை, உசிலம்பட்டி உள்ளிட்ட சில தொகுதிகளை நம்புகிறாராம். மேற்குறிப்பிட்ட இந்தத் தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்று நம்புகிறாராம்.