சபரிமலை பிரச்சனையில் உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம்போர்டு முடிவு எடுத்துள்ளது. இதை தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்தார்.
சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிதால் ஐயப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், சபரிமலையில் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதை அடுத்து பெண்கள் கோவிலுக்குள் செல்ல முயன்றனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக திருவனந்தபுரத்தில் திருவாங்கூர் தேவசம்போர்டு தலைமையகத்தில் தலைவர் பத்மகுமார் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. சபரிமலை பிரச்சனையில் எந்த முடிவையும் எடுக்க தேவசம் போர்டுக்கு கேரள அரசு அனுமதி அளித்திருந்த நிலையில் இந்த ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனைக்கு பின்னர் பத்மகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘’சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் நடைபெற்ற நிகழ்வுகளை உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும். தேவசம் போர்டின் முடிவுகளுக்கு கேரள அரசு ஒத்துழைப்பு தர வேண்டும். உச்சநீதிமன்றத்தை நாட முடிவெடுத்திருப்பதால் பக்தர்கள் அமைதி காக்க வேண்டும்.
வழக்கறிஞர்களுடன் ஆலோசித்தபின்னர் உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்வது எப்போது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
தேவசம் போர்டு தனது பாரம்பரியத்தை ஒருபோதும் விட்டுத்தராது’’ என்று உறுதியாக தெரிவித்தார்.