இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் (88 வயது) காலமானார்.
கரோனாவிலிருந்து மீண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், சிறுநீரக தொற்று, சிறுநீரக செயலிழப்பு காரணமாக, நேற்று முன்தினம் (24/02/2021) சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைமலைப்பட்டி கிராமத்தில் 1932- ஆம் ஆண்டு பிறந்தார் தா.பாண்டியன். அழகப்பா கல்லூரி பேராசிரியராகப் பணியைத் தொடங்கியவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அதைத் தொடர்ந்து, 1989, 1991 ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவை பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று, இரண்டுமுறை மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார் தா.பாண்டியன் .
பின்பு ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கி, 1983- ஆம் ஆண்டு முதல் 2000- ஆம் ஆண்டு வரை அதன் மாநிலச் செயலாளராக இருந்துள்ளார். அதன்பிறகு, 2000- ஆம் ஆண்டு ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியைக் கலைத்துவிட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மீண்டும் இணைந்தார். அதைத் தொடர்ந்து 2005- ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தா.பாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து மூன்றுமுறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பெருமைக்குரியவர் தா.பாண்டியன். இளம் வயதிலேயே கட்சியின் தேசியக் குழு உறுப்பினரான அவர், இறுதி வரை அப்பொறுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.