மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில் " GST கொண்டு வரப்பட்டதன் நோக்கம் ஒரு தேசம் ஒரு வரி என்பதே. இருப்பினும் பெட்ரோல். டீசல் விற்பனை இந்த கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படவில்லை. இதனால், பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். பண மதிப்பும் குறைந்து வரும் சூழலில், சில வாரங்களுக்கு முன்பாக பெட்ரோலியத்துறை அமைச்சர் பெட்ரோலிய உற்பத்திப் பொருட்களை GSTயின் கீழ் கொண்டு வர பரீசிலிக்க வேண்டுமென கூறினார். அது நடைமுறைப்படுத்தபட்டால் பெட்ரோல், டீசல் மற்றும் அவை சார்ந்த உற்பத்திப் பொருட்களின் விலை குறையும்.
கடந்த செப்டம்பரில் பெட்ரோல் ஒரு லிட்டர் 70.55 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இது GSTயின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தால் அதிக பட்ச வரி விதிக்கப்பட்டாலும், விலை 40.05 ரூபாயாகவே இருந்திருக்கும். டீசலை பொறுத்தவரை அதிக பட்சம் 37 ரூபாயாக இருந்திருக்கும்.
நாளுக்கு நாள் அனைத்து பொருட்களின் விலைவாசியும் அதிகரித்து வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் அந்த பொருட்களின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். இவற்றை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விற்பனையை GSTயின் கீழ் கொண்டு வர கோரி, தொடர்புடைய அதிகாரிகளுக்கு கடந்த பிப்ரவரி 16ல் மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. ஆகவே, பெட்ரோல், டீசல் விற்பனையை ஜி.எஸ்.டியின் கீழ் கொணர உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன், நீதிபதி ஹேமலதா அமர்வு, ஜி.எஸ்.டி சட்டப்படி, இந்த வழக்கில் உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.