தமிழக அரசின் நிர்வாகத்துக்கான 'மூளை' இயங்கும் இடம் என்றால் அது தலைமைச் செயலகம்தான். அப்படிப்பட்ட தலைமைச் செயலகத்திலேயே இப்போது கரோனா தொற்று தன் தீவிரத்தைக் காட்ட ஆரம்பித்திருக்கிறது.
இரண்டு வாரங்களுக்கு முன் தலைமைச் செயலகமான நாமக்கல் மாளிகையின் பத்தாவது மாடியில் முதன்முதலாக தலைமைச்செயலகப் பணியாளர் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. அது இரண்டே வாரத்தில் கிடுகிடுவென இப்போது மூன்றாவது தளம், ஐந்தாவது தளம், ஏழாவது தளம் மற்றும் பழைய கட்டிடம் என்று பரவி, அங்கு பகீர் நிலையை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக வனத்துறை, சமூக நலத்துறை, பொதுப்பணித்துறை, பொதுக் கணக்குக் குழு என பலதுறை ஊழியர்களும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் 50 சத ஊழியர்களுடன் இயங்கும் தலைமைச் செயலகத்தின் லிஃப்ட்டில், சமூக விலகலைக் கடைப்பிடிக்க முடியாத அளவுக்கு நெரிசல் நிலவுகிறதாம்.
இதுகுறித்து அங்குள்ள பணியாளர்களிடம் நாம் கேட்டபோது, ”தலைமைச் செயலக ஊழியர்களான எங்களுக்கு மட்டும் கபசுர குடிநீர், மல்டி விட்டமின் மற்றும் ஜின்ங் மாத்திரைகளைக் கொடுத்து வேலைக்கு வரச்சொல்லும் அரசு, எங்கள் குடும்பத்தினருக்கு இவற்றைத் தரமறுக்கிறது. இதனால் பணி முடிந்து வீட்டுக்குத் திரும்பும் எங்களைக் கண்டு, எங்கள் குடும்பத்தினரே, அச்சத்தோடு விலகி நிற்கும் சூழல் நிலவுகிறது.
கோட்டையில் இருக்கும் பெரிய அதிகாரிகளின் அறைகளைத் தவிர மற்ற பகுதிகளில் உள்ள ஏ.சி. நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாஸ்க் உள்ளிட்ட கவசங்கள் அணியும் நாங்கள் அடிக்கும் வெயிலில் வாடி வதங்கிக்கொண்டிருக்கிறோம். பலர் அங்கே மயங்கி விழுவதையும் பார்க்க முடிகிறது. அங்கே குடிநீரும் பல இடங்களில் வருவதில்லை. இதனால் தொற்று அச்சத்திலும் இறுக்கத்திலும் அல்லாடிக் கொண்டிருக்கிறோம்” என்கிறார்கள் பரிதாபமாக.
இப்படித் தலைமைச் செயலகமே பரிதாபத்தில் இருப்பது கொடுமையிலும் கொடுமை.