காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் மத்திய,மாநில அரசை கண்டித்து தொடர் போராட்டம் மற்றும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக திமுக தலைமை கழகம் விடுத்துள்ள அறிவிப்பு:
’’திராவிட முன்னேற்றக் கழகச் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு, உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் தமிழ்நாட்டின் காவிரி உரிமையைக் காலடியில்போட்டு மிதித்துள்ள மத்திய பா.ஜ.க. அரசையும், தங்கள் மீதுள்ள ஊழல் வழக்குகளைக் கருதியும் ஆபத்திலிருந்து பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவும் எஜமான விசுவாசத்தோடு, மத்திய பா.ஜ.க. அரசுக்கு அழுத்தம் எதுவும் கொடுக்காமல்,காவிரி உரிமையை அடகு வைத்துள்ள அதிமுக அரசைக் கண்டித்தும் சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு செயல் தலைவர் அனைத்து கட்சி தலைவர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தியுள்ளார். அங்கு இப்போராட்டம் தொடர் போராட்டமாக நடைபெறும் என்று செயல் தலைவர் அறிவித்தபடி நாளை (02.04.2018) முதல் வருகின்ற 04.04.2018ஆம் தேதி வரை தொடர் போராட்டமாக நடைபெறும் என்றும், 05.04.2018 அன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு நடைபெறும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
கழக மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தங்கள் மாவட்டங்களில் ஒத்த கருத்துடைய அனைத்துக் கட்சி மாவட்டச் செயலாளர்களுடன் இணைந்து தொடர் போராட்டத்தையும், முழு அடைப்பையும், பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் பங்கேற்புடன், ஜனநாயக நெறிமுறைகளின்படி அறவழியில் நடத்திட வேண்டும்.
தமிழகத்தின் காவிரி உரிமையை மீட்டெடுக்க நடத்தப்படும் இந்த தொடர் போராட்டத்தையும், முழு அடைப்பையும் வெற்றிகரமானதாக்கிட வேண்டுமென மாவட்ட கழக செயலாளர்களை தலைமைக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.’’