பல்கலைக்கழக துணைவேந்தர்கள் லஞ்ச ஊழல்களால் கைது செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில், தனியார் கல்லூரியின் அராஜகத்துக்கு துணைபோகும் உயர்கல்வித்துறை அதிகாரிகள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் கிளம்பிக்கொண்டிருக்கின்றன.
இதுகுறித்து, சென்னை கோடம்பாக்கத்திலுள்ள மீனாட்சி கல்லூரி முன்னாள் மாணவிகள் தலைவி அர்ச்சனா நம்மிடம், “""தமிழகத்துல... ஏன்… இந்தியாவிலேயே பெயர்ப்பலகை’ இல்லாம ஒரு கல்லூரி செயல்படுதுன்னா அது மீனாட்சி ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரிதான். இதே வளாகத்துக்குள்ள ரெண்டு கல்லூரிகள் பெயர்ப்பலகை இல்லாம சட்டத்துக்குப் புறம்பாக செயல்பட்டுக்கிட்டிருக்கு. இந்தக் கல்லூரியில பெயருக்காக ஒரு முதல்வர் இருக்கும்போதே, ஏ டூ இசட்டாக ஆட்டம் போட்டவர் கல்லூரியின் செகரெட்டரி லட்சுமி. கடந்த, 2017 மே 31-ந் தேதியோடு பொம்மை’ முதல்வர் ரிட்டயர்டு ஆகிட்டாங்க.
ஆனா, இதுவரைக்கும் இந்தக் கல்லூரிக்கு முதல்வர் பதவியை நிரப்பாம நிரந்தர முதல்வராகிவிட்டார் செகரெட்டரி லட்சுமி. 8 மணியிலிருந்து 2:30 மணிவரை க்ளாஸ். எங்கயாவது, 11:15 மணிக்கே லஞ்ச் பிரேக் வைப்பாங்களா? அதுவும், 20 நிமிடங்கள்தான் லஞ்ச் டைம். ஏன்னா, இதே கேம்பஸ்ல இருக்கிற பொறியியல் கல்லூரி மாணவர்கள் லஞ்ச்சுக்கு வர்றதுக்கு முன்னால நாங்க சாப்பிட்டுட்டு ஓடிடணுமாம். கைகழுவக்கூட தண்ணீர் இருக்காது. எந்த நேரத்துல எந்த பாத்ரூம் மூடியிருக்கும்னு தெரியாம மாணவிகள் படுற அவஸ்தை கடவுளுக்குத்தான் தெரியும். அரசாங்கமே லீவு விட்டாலும் இவங்க லீவு விடமாட்டாங்க''’என்ற முன்னாள் மாணவி அர்ச்சனாவின் குற்றச்சாட்டுகளை ஆமோதிக்கும் இந்நாள் மாணவிகளோ...
""அரசு நிர்ணயித்த ஃபீஸைவிட பல மடங்கு அதிகமா வசூல் பண்ணுவாங்க. லயன்ஸ் க்ளப்புன்னு சொல்லிக்கிட்டு பாலாஜிரத்தினம்னு ஒருத்தர் வருவாரு. போன் பேசிக்கிட்டே மாணவிகளை ஒருமாதிரி பார்த்துக்கிட்டிருப்பாரு. உயர்கல்வித்துறை அதிகாரிகளை கவனிக்கவேண்டிய விதத்துல கவனிச்சுடுறதால மாணவிகளுக்கு எதிராக செகரெட்டரி என்ன அட்டூழியம் பண்ணினாலும் ஆர்.ஜே.டி. (கல்லூரி கல்வி இணை இயக்குனர்) கண்டுக்கமாட்டாங்க. எங்களோட உரிமைகளுக்காக போராடின மூன்று பேராசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்காம அவங்களுக்கு வகுப்பும் கொடுக்காம பழிவாங்கிக்கிட்டிருக்காங்க''’’என்று குமுறலுடன் குற்றம்சாட்டுகிறார்கள் மாணவிகள்.
இதுகுறித்து, பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் காந்திராஜன் நம்மிடம், “""உயர்கல்வித்துறை மண்டல இணை இயக்குனர்களிடமிருந்து 62 உத்தரவுகள் மீனாட்சி கல்லூரிக்கு போயிருக்கு. ஆனா, ஒரு உத்தரவைக்கூட மதித்ததில்லை அக்கல்லூரியின் செகரெட்டரி லட்சுமி. பல்வேறு போராட்டங்களை நடத்திட்டோம். இணை இயக்குனர் வெண்ணிலா (Regional Joint Director of Collegiate Education),, கல்லூரி கல்வி இயக்குனர் மஞ்சுளா(Director of Collegiate Education) உள்ளிட்டவர்களின் கவனத்துக்கு கொண்டுசென்றபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்கல''’என்கிறார் வேதனையுடன்.
இதுகுறித்து, போராட்டத்திலுள்ள பேராசிரியர்கள் சுஜாதா, அகிலாதேவி ஆகியோர் நம்மிடம், “""நக்கீரன் இதழும்…இன்னபிற பத்திரிகை ஊடகங்கள் மூலமும் மீனாட்சி கல்லூரியின் மாணவர்-ஆசிரியர் விரோதப்போக்கை அம்பலப்படுத்திய பிறகு… ஓரளவுக்கு அடங்கிப்போயிருந்தார் கல்லூரி செகரெட்டரி லட்சுமி. ஆனால், மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியதுபோல் அராஜகப்போக்கில் ஆட ஆரம்பித்துவிட்டார். பழிவாங்கும் நோக்கத்துடன் 19 மாதங்களாக சம்பளம் கொடுக்காம 5 லட்ச ரூபாய்க்குமேல் பெண்டிங் வைத்திருக்கிறார். பாடமும் எடுக்கவிடாமல் செய்வதால், மாணவிகள் பாதிக்கப்படுறாங்க. 2017, டிசம்பர் 5-ந் தேதியிலிருந்து பயோமேட்ரிக் வருகைப் பதிவேட்டை ஆஃப் பண்ணி வெச்சுட்டு மீண்டும் பழைய வருகைப் பதிவேட்டை வைத்து இரண்டுமுறை கையெழுத்து போடணும்னு சட்டத்துக்குப் புறம்பாக செயல்படுகிறார். செகரெட்டரிக்கு அடியாள் வேலை பார்த்துக்கிட்டிருந்த பாலாஜி ரத்தினத்தை இப்போது, பி.ஆர்.ஓ.ன்னு பதவி கொடுத்து கல்லூரியிலேயே நிரந்தரமா தங்க வெச்சுட்டாங்க. இந்த பாலாஜிரத்தினம், ஆர்.ஜே.டி. வெண்ணிலாவுக்கு வேண்டப்பட்டவர்னு பிறகுதான் தெரிஞ்சது. மாணவிகள், ஆசிரியர்கள் எந்தப் போராட்டம் பண்ணினாலும் எங்களை மிரட்டுவது, செல்போனில் வீடியோ எடுப்பது, கோடம்பாக்கம் காவல்நிலைய போலீஸ் எஸ்.ஐ.அம்பேத்கரை வெச்சு மிரட்டுவதுன்னு ரவுடியிஸம் பண்ணிக்கிட்டிருக்காரு''’’என்கிறார்கள் குற்றச்சாட்டாக.
இதுகுறித்து, மீனாட்சி கல்லூரி பி.ஆர்.ஓ. என்று சொல்லப்படுகிற பாலாஜிரத்தினத்தை தொடர்புகொண்டு நாம் கேட்டபோது, ""எதுவா, இருந்தாலும் கல்லூரி செகரெட்டரி லட்சுமியிடம் கேளுங்க. நான் யூ.ஜி.சி. சம்பந்தப்பட்ட ஒர்க்கைதான் பார்க்குறேன்''’என்றவரிடம், ‘"போர்டே இல்லாம ரெண்டு கல்லூரிகள் நடத்துறீங்களே? பொறியியல் கல்லூரிக்கு அனுமதி வாங்கிட்டீங்களா?'’என்று கேட்டபோது பதில் சொல்லாமல் போனை துண்டித்தார்.
செகரெட்டரி லட்சுமியை தொடர்புகொண்டபோது வழக்கம்போல, "மேடம்… பிஸி'…என்று நமது செல்போன் நம்பரை வாங்கிக்கொண்டார் அலுவலகப் பெண்மணி. கல்லூரி கல்வி இயக்குனர் மஞ்சுளாவை தொடர்புகொண்டு கேட்டபோது, “""எதுவா இருந்தாலும் ஆர்.ஜே.டி. வெண்ணிலாகிட்ட கேளுங்க''’என்றார், அவருக்கு எதுவுமே சம்பந்தம் இல்லாததுபோல. ஆனால், ஆர்.ஜே.டி. வெண்ணிலாவை பலமுறை தொடர்புகொண்டபோதும் ""நான் பிஸியாக இருக்கிறேன்... பிறகு பேசுகிறேன்''’என்று மழுப்பிக்கொண்டேயிருக்கிறார்.
இதுகுறித்து, உயர்கல்வித்துறை செயலாளர் சுனில்பாலிவால் ஐ.ஏ.எஸ்.-ஐ தொடர்புகொண்டபோது, அவர் ஐ.ஏ.எஸ்.களுக்கான மாநாட்டில் இருந்தார். உயர்கல்வித்துறை அதிகாரிகளே! இப்படிப்பட்ட கல்லூரியில் உங்கள் பிள்ளைகளை படிக்கவைத்திருந்தால்...… ஒரு பெற்றோராக நீங்கள் என்ன செய்வீர்கள்?
-மனோ சௌந்தர்
படங்கள்: அசோக்