Skip to main content

தொகுதிவாசிகளுக்குத்தான் சீட்! - ராகுல்காந்திக்கு போகும் புகார்கள்!

Published on 19/02/2021 | Edited on 19/02/2021

 

ddd

 

ஒவ்வொரு தேர்தலின்போதும் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில், தொகுதிக்குச் சம்பந்தமில்லாத பலரும் சீட் வாங்கி விடுகின்றனர். இதனால் காலம் காலமாக உழைத்த தொண்டர்களுக்குப் போட்டியிட வாய்ப்பு கிடைப்பதில்லை. டெல்லியில் உள்ள மேலிடச் செல்வாக்கைப் பயன்படுத்தி பணம் படைத்த பலரும் சீட் வாங்கி விடுவதால், உழைக்கும் அடிமட்ட தொண்டர்களுக்கு சீட் கிடைப்பதே இல்லை என்கிற குரல் தமிழக காங்கிரசில் வலுத்து வருகிறது. 

 

இந்த நிலையில், இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் அப்படி நடந்து விடக்கூடாது என இப்போதே டெல்லி தலைமைக்குப் புகார்களை அனுப்பி வருகிறார்கள் உண்மையான கதர்ச்சட்டை தொண்டர்கள். குறிப்பாக, தமிழக காங்கிரசில் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் சில முக்கிய விசயங்களைப் பின்பற்ற வேண்டும் என கோஷ்டி அரசியலில் சிக்காத கதர்ச்சட்டை நிர்வாகிகள், ராகுல் காந்திக்குத் தகவல் அனுப்பியுள்ளனர்.  

 

அதாவது, ’’தொகுதியில் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த முறை சீட் வழங்க வேண்டும். மாவட்டம் மாறி, தொகுதி மாறி சீட்டு கேட்பவர்களுக்கு வாய்ப்பு தரக்கூடாது. கட்சியின் தலைவராக இருந்தாலும் இந்த நடைமுறையைக் கடைப்பிடியுங்கள். 

 

திமுக கூட்டணியில் எந்த தொகுதியை வேண்டுமானாலும் கேட்டு வாங்குங்கள். அது பிரச்சனை இல்லை. ஆனால், காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் சம்மந்தப்பட்ட தொகுதியைச் சேர்ந்தவரையே வேட்பாளராகத் தேர்வு செய்ய வேண்டும். தொகுதியின் வாக்காளர் பட்டியலில் சம்மந்தப்பட்டவரின் பெயர் இருப்பதோடு, சம்மந்தப்பட்டவர் தொகுதியிலேயே வசித்தவராக, வசிப்பவராக இருப்பது அவசியம். தொகுதி மாறியோ, மாவட்டம் மாறியோ சீட்டுகள் யாருக்கும் ஒதுக்கக்கூடாது. 

             

அப்படி ஒதுக்கினால், தொகுதிமாறி நிற்கும் நபரால் ஜெயிக்க முடியாது. இந்த தேர்தலில் மண்ணின் மைந்தர்களைத்தான் வாக்காளர்கள் தேடுகிறார்கள். அதனால், இந்த ஒரு முறையாவது தொகுதியில் வசிப்பவர்களுக்கு சீட் வழங்குங்கள்‘’ என்று சோனியாவுக்கும் ராகுலுக்கும் மெசேஜ் பாஸ் செய்துள்ளனர் கோஷ்டிகளில் சிக்காத காங்கிரஸ் தொண்டர்கள். 
                      

’’இந்த குரல் நியாயமானதுதான். ஆனால் கட்சியில் உள்ள சாமானியர்களின் குரலை எங்கள் மேலிடம் பரிசீலிக்குமா, என்ன?’’ என்கிறார் முன்னாள் தலைவர் ஒருவர் நம்மிடம் நமட்டுச் சிரிப்புடன்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மக்களவைத் தேர்தல்; போட்டியின்றி தேர்வான பா.ஜ.க வேட்பாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
BJP candidate selected without competition at Lok Sabha elections

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதற்கிடையே,மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் மே 7ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 19ஆம் தேதி எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில், காங்கிரஸ், பா.ஜ.க, மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.  அதன்படி, குஜ்ராத் மாநிலத்துக்கு உட்பட்ட சூரத் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிட பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இதில், பா.ஜ.க சார்பில் முகேஷ் தலால் வேட்புமனு தாக்கல் செய்தார். அதே போல், காங்கிரஸ் கட்சி சார்பாக நிலேஷ் கும்பானி, பகுஜன் சமாஜ் கட்சி பியோரேலால் பாரதி உட்பட 8 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில்,காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனுவில் போலியான சாட்சி கையெழுத்திட்டதாக கூறி அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு பதிலாக காங்கிரஸ் சார்பில் மாற்று வேட்பாளராக சுரேஷ் பத்ஷாலா அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரது வேட்புமனுவும் தகுதியற்றது எனக் கூறி, அவருடைய வேட்புமனுவிலும் போலியான சாட்சி கையெழுத்திட்டதாகக் கூறி நிராகரிக்கப்பட்டது.

இதனால், சூரத் மக்களவைத் தொகுதிக்கான போட்டியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் இன்று (22-04-24) என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உட்பட அனைத்து சுயேட்சை வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுவிட்டனர்.

இதனால், சூரத் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் முகேஷ் தலால், வாக்குப்பதிவுக்கு முன்னரே போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.  இது காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளையும் கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும், இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.