கடந்த அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் ஆர். காமராஜ். அப்போது பொது விநியோக திட்டத்தின் கீழ் உணவுப் பொருள் கொள்முதல் செய்ததில் ரூ.350 கோடி முறைகேடு செய்துள்ளதாக ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மேலும் 2015 முதல் 2021 ஆம் ஆண்டு வரை பொது விநியோக திட்டத்தின் கீழ் உணவுப் பொருள் கொள்முதல் செய்ததில் 2 ஆயிரத்து 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி பல முறை புகார் அளித்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இரு வழக்குகளும் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, “இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 6 மாதங்களில் விசாரணை முடிக்கப்படும்” எனத் தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, முன்னாள் அமைச்சர் காமராஜூக்கு எதிரான முறைகேடு புகாரில் 6 மாதங்களில் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும் என தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும் புகார்தாரர்கள் இருவரும் டிசம்பர் 6 ஆம் தேதி புலன் விசாரணை அதிகாரி முன்பு ஆஜாராகி விளக்கமளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.