காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி இறுதித்தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டிருந்தது. அந்த கெடு முடிந்தும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நிலையில், தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. பின்னர் நீதிமன்றத்தின் கடும் கண்டனத்தைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் காவிரி நதிநீர் பங்கீடு குறித்த வரைவு செயல்திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்தது. அப்போது, அந்த அறிக்கையை தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு அனுப்ப வேண்டும் என்றும், அதில் உள்ள நிறைகுறைகளை மாநிலங்கள் தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதுகுறித்து இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இன்றைய விசாரணையில், காவிரி அமைப்பின் பெயர் மேலாண்மை வாரியம் என இருக்க மத்திய அரசும், கர்நாடகாவும் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து நீர்ப்பங்கீடு தொடர்பாக அனைத்து இறுதி முடிவுகளையும் வாரியமே எடுக்கும். மத்திய அரசுக்கு இதில் அதிகாரமில்லை என்று உத்தரவிட்டு, இறுதி முடிவை மத்திய அரசு எடுக்கும் என்ற வரைவு அறிக்கையின் அம்சத்தை நீக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். பிரச்சனை ஏற்பட்டால் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் அமைப்பிற்கே உள்ளது. மத்திய அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை. தமிழ்நாடோ, கர்நாடகமோ வாரியத்தின் அனுமதி இன்றி எந்த அணையும் கட்டமுடியாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அமைப்பின் பெயர், அதிகாரம், அணை கட்டும் அனுமதி ஆகிய 3 அம்சங்களையும் திருத்திய வரைவு அறிக்கையை நாளை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மாநில அரசின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு நாளை பதிலளிக்க உத்தரவிட்டும் காவிரி வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.