கடந்த 2018ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சியின் சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக பா.ஜ.க.வைச் சேர்ந்த விஜய் மிஸ்ரா, உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த 16ஆம் தேதி, வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. இதையடுத்து, சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி, தனக்கு ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்.
இது மனு மீதான வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. முன்னதாக இந்த வழக்கை தொடர்ந்த பா.ஜ.க பிரமுகர் விஜய் மிஸ்ரா கூறுகையில், “பா.ஜ.க நாட்டின் மிகப்பெரிய கட்சி. அந்த கட்சியைச் சேர்ந்த தலைவர் பற்றி அவதூறாக பேசுவது நியாயமற்றது” என்று கூறினார்.