அரியலூர் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை கலெக்டர் அறிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பாதுகாப்பு பகுதி தவிர இதர பகுதிகளில் கடைகள் மற்றும் அதன் தொடர்பான பணி நேரங்கள் பின்வருமாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
தனிக்கடைகளாக செயல்படும் கட்டுமான ஹார்டுவேர் கடைகள், சிமெண்ட் கட்டுமான பொருட்கள் விற்பனை கடைகள், சானிடரிவேர் கடைகள், மின்சாதன பொருட்கள் நகர்புறங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும், கிராமபுறங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
செல்போன் விற்பனை மற்றும் பழுது நீக்கம் செய்யும் கடைகள், கணிப்பொறி கடைகள், வீட்டு உபயோக பொருட்கள், மோட்டார்கள், கண்கண்ணாடி விற்பனை கடைகள் நகர்புறங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையும், கிராமபுறங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையும் திறக்க அனுமதிக்கப்படுகிறது.
அரியலூர் மாவட்டத்தில் அயன்ஆத்தூர், இடையத்தாங்குடி கல்லக்குடி, காவனூர், உல்லியக்குடி, சொக்கநாதபுரம், வஞ்சினாபுரம் ஆகிய கிராமங்களில் ½ கிலோமீட்டர் இடைப்பட்ட பகுதியும், காவனூர் அம்பாபூர், காத்தான்குடிகாடு, நாகமங்லம் - காஞ்சலிக்கொட்டாய், கொலையனூர் - நத்தவெளி, நத்தக்குழி - நல்லான்காலனி, பெரியாக்குறிச்சி - பெரியாக்குறிச்சி காலனி, சிறுகளத்தூர் - பொன்பரப்பி, அங்கராயநல்லூர் - சிலால், நமங்குணம் - பாலையூர், பாலையூர் - என்.குடிகாடு, பழமைநாதபுரம் ஆகிய கிராமங்களில் ½ கிலோமீட்டர் இடைப்பட்ட பகுதியும், நக்கம்பாடி, பெருமாண்டி ஆகிய கிராமங்களில் 2 கிலோ மீட்டர் உட்பட்ட பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டப்பட்ட பகுதிகளாகும்.
அரியலூர் நகரம் (வார்டு எண்-11) செட்டி ஏரி , சந்தைபேட்டை, வண்ணாங்குட்டை, பெரியஏரி தெரு, எம்.ஜி.ஆர்.நகர், கவரைத்தெரு, மார்க்கெட் தெரு, ராமலிங்க முதலியார் தெரு, சிங்காரத்தெரு, சிந்தாமணித்தெரு, கோர்ட் தெரு, பவுண்டுத்தெரு. சடையப்பர் தெரு ஆகியபகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாகும். நகர்பகுதிகளில் கட்டுமானப் பணிகள் பணியிடத்திலேயே பணியாளர்கள் இருந்தால் மட்டும் அனுமதிக்கப்படும். பணியாளர்களை ஒரு முறை மட்டும் வேறு இடத்திலிருந்து அழைத்துவர அனுமதிக்கப்படும். அதற்கான வாகன அனுமதியினை பெறவேண்டும்.
அரியலூர் மாவட்டம் முழுவதும் சலூன் கடைகள், அழகு நிலையங்கள், மால்கள், ஷாப்பிங் காம்பளக்ஸ் (வணிக வளாகங்கள்) ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், இருசக்கர நான்கு சக்கர வாகன ஷோரூம்கள், நகை அடகுக்கடைகள் செயல்பட அனுமதி கிடையாது.
அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டும் வீட்டிலிருந்து வெளியில் வரவேண்டும். இருசக்கர வாகனம் எனில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும். நான்கு சக்கர வாகனம் எனில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும். உரிய வாகன அனுமதி அல்லது அரசு பணியாளர் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். அவசர மருத்துவம், இறப்பு போன்ற தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியில் செல்பவர்கள் உரிய வாகன அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்.
தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் வீட்டிலிருந்து பணியிடத்திற்கு செல்வதற்கு தொழிற்சாலை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனத்தில் மட்டுமே பயணிக்க வேண்டும். இவர்கள் இரு சக்கர வாகனத்தில் பணிக்கு செல்ல அனுமதி கிடையாது. பிளம்பர், எலெக்ட்ரிசன், ஏ.சி. மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள் பணிபுரிய இணையதளம் மூலம் உரிய வாகன அனுமதி பெற வேண்டும். தங்கும் வசதியுடன் கூடிய ஓட்டல்கள் செயல்பட அனுமதி இல்லை. மற்ற உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. (பார்சல் மட்டும்) உணவகத்தில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை.
சைக்கிள் ரிக் ஷா, டாக்ஸி, ஆட்டோ, திரையரங்கம், விளையாட்டு பொருட்கள் விற்பனை கடைகள், நீச்சல் குளம், பொழுதுபோக்கு பூங்காக்கள், பார்கள், லாட்ஜ் , உடற்பயிற்சி நிலையங்கள், மத வழிப்பாட்டு நிகழ்ச்சிகள், மதவழிப்பாட்டு தளங்கள், பேருந்துகள், ரயில், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிலையங்கள் செயல்பட அனுமதி இல்லை.
அனைத்து கடைகளுக்கும் முன்னர் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி நிற்பதற்காக 1 மீட்டர் இடைவெளியில் வெள்ளை கோடுகள் பெயிண்டினால் வரையப்பட்டிருக்க வேண்டும். விதி முறைகளை மீறி செயல்படும் கடைகள் கண்டறியப்பட்டால் உடனடியாக மூடி சீல் வைக்கப்படும். அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். சோப்பு சானிடைசர் கொண்டு கைகளை அவ்வப்போது கைகளை நன்றாகக் கழுவ வேண்டும்.
மேற்படி அனுமதிக்கப்பட்ட அனைத்து கடைகளிலும் கிருமி நாசினி கொண்டு தினமும் இருவேளைகள் சுத்தம் செய்ய வேண்டும். பணியாளர்கள், கடைக்கு வரும் பொதுமக்கள் கை கழுவ சோப்பு, தண்ணீர் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். கடையின் முன்பும், கடையின் உள்ளேயும் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
அரியலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க மேற்கண்ட நடைமுறைகளை பின்பற்றி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 35 பேர் நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தனர். இன்று ஒரே நாளில் மருத்துவ பரிசோதனை அறிக்கையில் 188 பேர்களுக்கு புதிதாக நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.