ரஜினி வருகையால் தமிழக அரசியலில் எந்தவொரு புதுமையும் நடக்கப் போவதில்லை என மதுரையில் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேட்டி அளித்தார்.
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் 566 நபர்களுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு கலந்துகொண்டு நலத்திட்டங்களை வழங்கினார்.
பின்னர் விழாவில் பேசுகையில் "தி.மு.க ஆட்சியில் முதியோர் ஓய்வூதியம் வாங்குவதில் பல சிக்கல்கள் இருந்தன. அ.தி.மு.க ஆட்சியில் முதியோர் ஓய்வூதியம் எளிதில் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 31 லட்சம் முதியோர்கள் ஓய்வூதியம் பெறுகிறார்கள். அ.தி.மு.க ஆட்சியில் கூடுதலாக 5 லட்சம் முதியோர்கள் ஓய்வூதியம் பெறுகிறார்கள்.
மதுரையில் இன்னும் சில ஆண்டுகளில் ஒவ்வொருவருக்கும் வீட்டு வாசலில் குடிநீர் கிடைக்கும். அ.தி.மு.க ஆட்சியில் மதுரை மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது. புனிதமான வைகையில் கழிவுநீர் கலக்காத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 78 கோடி மதிப்பில் வைகையாற்றின் கரையில் புதிய சாலை அமைக்கப்படும்.
தி.மு.க ஆட்சியில் 2 ஏக்கர் நிலம் கொடுக்கப்படும் எனச் சொன்னார்கள். 2 செண்ட் நிலம் கூட கிடைக்கவில்லை. அ.தி.மு.க ஆட்சியில் சொன்னதைச் செய்கிறோம், அ.தி.மு.க ஆட்சி சொல்லாததையும் செய்துவருகிறது. மக்களே அ.தி.மு.க ஆட்சியின் எஜமானர்கள். மதுரையின் மெரினாவாக வண்டியூர் தெப்பக்குளம் திகழ்கிறது.
ஜெயலலிதாவுக்கு யாரும் இல்லாததால் மக்களின் நலன்களை மட்டுமே சிந்தித்து வந்தார். அ.தி.மு.க ஆட்சியில் 51 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டின் வழியே 35 லட்சம் நோயாளிகள் பயன் பெற்றுள்ளனர். 1 கோடியே 1 லட்சம் விவசாயிகளுக்கு கூட்டுறவுத்துறையின் வழியாக வட்டியில்லா கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு 29 ஆயிரம் கோடி ரூபாய் கடன்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி உள்ளார்.
அ.தி.மு.க அரசு 10 ஆண்டுகளாக ஆட்சியில் என்ன தவறுகள் செய்தது? அ.தி.மு.க அரசு என்ன தவறுகள் செய்தது என மக்கள்தான் சொல்ல வேண்டும். ஜாதி, மதம் பார்க்காமல் அ.தி.மு.க அரசு அனைவருக்கும் நலத்திட்டங்கள் வழங்கியுள்ளது எனப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "முதல்வர் நிகழ்ச்சியில் எந்தவொரு விதிமுறை மீறலும் கிடையாது. ஆண், பெண் இரண்டரை ஆண்டுகள் ஆட்சி புரிவது எனத் துணை முதல்வர் பேசியது, அவருடைய எண்ணத்தின் வெளிப்பாடு. துணை முதல்வர் கருத்து எதன் அடிப்படையில் பேசியது எனத் தெரியவில்லை.
2010 ஆம் ஆண்டு முதல் தமிழக மக்களுக்கு விடியல் ஏற்பட்டுள்ளது. தி.மு.க ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களைச் சொல்லத்தாயாரா? எனச் சவால் விடுகிறேன். செயல்படுத்த முடியாத திட்டங்களை தி.மு.க அறிவித்தது. திரையில் பார்த்த கமலை, நேரில் பார்க்க கூட்டம் வருகிறது.
தமிழகத்தைக் கொள்ளையடிப்பதே திமுகவின் ஒரே நோக்கம். மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்கள் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால்தான் மற்றவை தெரியவரும். தமிழகத்தில் எந்தவொரு மொழியும் திணிக்கப்படவில்லை. திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி, சமஸ்கிருதம் கற்றுக் கொடுப்பதை நிறுத்தத் தயாரா?
தமிழகத்தில் எடப்பாடியார் அலை வீசுகிறது. எடப்பாடியார் அலையைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் பேசி வருகிறார்கள். எதிலும் அரசியல் செய்பவர் ஸ்டாலின். தி.மு.க ஆட்சியில் சந்தித்த பிரச்சினைகளை மக்கள் மறக்கவில்லை.
நேற்று வரை அறைக்குள் இருந்த நடிகர்கள் இன்று பொதுவெளிக்கு வந்துள்ளனர். நடிகர்களை முதல்வர் வேட்பாளராக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ரஜினி வருகையால் தமிழக அரசியலில் எந்தவொரு புதுமையும் நடக்கப் போவதில்லை. அதிமுகவில் இருந்து அமைச்சர்கள் உட்பட யாரும் ரஜினியின் கட்சிக்குச் செல்லமாட்டார்கள்" எனக் கூறினார்.