பசும்பொன்னில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரை வரவேற்று வைக்கப்பட்டிருந்த அனைத்து பிளக்ஸ் பேனர்கள் டிடிவி தினகரன் ஆதரவாளர்களால் கிழிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடம் உள்ளது. முத்துராமலிங்கத்தேவரின் 111வது ஜெயந்திவிழா மற்றும் 56வது குருபூஜை விழா கடந்த 28ம் தேதி தொடங்கியது. தேவரின் ஆன்மீக விழா, அரசியல் விழாவைத்தொடர்ந்து மூன்றாவது நாளான இன்று குரு பூஜை விழா நடைபெற்றது.
இன்று குருபூஜை விழாவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார், டாக்டர் விஜயபாஸ்கர், அன்வர்ராஜா எம்.பி உள்ளிட்டோர் வந்து தேவர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களை வரவேற்கும் விதமாக சாலையின் இருபக்கமும் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. டிடிடி தினகரன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திவிட்டு சென்றபோது, அவரது ஆதரவாளர்கள் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களை வரவேற்கும் விதமாக வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை கிழித்ததாக கூறப்படுகிறது.
இது பற்றி புகார் எதுவும் வராததால் வழக்குப்பதிவு செய்யவில்லை என்கின்றனர் காவல்துறையினர். எனினும், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஆளுங்கட்சி பிளக்ஸ் பேனர்கள் அனைத்தும் கிழிக்கப்பட்டுள்ள சம்பவம் பசும்பொன்னில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.