சென்னை, கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காகச் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் புதிய புறநகர்ப் பேருந்து முனையம் அமைத்திட தமிழ்நாடு அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய புறநகர்ப் பேருந்து முனையக் கட்டுமானத்திற்காக சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு நிலம் மாற்றப்பட்டு, தொடர்புடைய அனைத்துக் கட்டுமானம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி இந்த புதிய பேருந்து முனையத்திற்கு ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ எனப் பெயரிடப்பட்டு 393.74 கோடி ரூபாய் செலவில் சுமார் 6 இலட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டடங்கள் அமைக்கப்பட்டன. இந்த பேருந்து முனையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி திறந்து வைத்தார். இதனையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து முதற்கட்டமாக அரசு விரைவு பேருந்துகள் (SETC) இயக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஜனவரி 24 ஆம் தேதி முதல் தனியார் சொகுசு பேருந்துகள் (OMNI BUS) இயக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் 710 அரசுப் பேருந்துகளும் (TNSTC) கடந்த 30 ஆம் தேதி (30.01.2024) முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதிதாக காவல் நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (05.02.2024) நடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக விரைவில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும். இந்த உணவகத்தில் வழங்கப்படும் உணவு தரமானதாக இருக்கும்.
கோயம்பேட்டில் இருந்து பேருந்து நிலையத்தை கிளாம்பாக்கத்திற்கு இடம் மாற்றம் செய்யும் போது கோயம்பேட்டில் 32 கடைகள் இருந்தன. அந்த 32 கடைகளுக்கு உரிய உரிமையாளர்களை கணக்கிட்டால், மொத்தம் 11 பேர் தான் உரிமையாளர்கள் ஆவர். இந்த 11 உரிமையாளர்களுக்கு கிளாம்பாக்கத்தில் மலிவு விலையில் கடை ஒதுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிலையம் கட்டும் பணி ஏப்ரலில் நிறைவு பெறும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்த 35 நாட்களுக்குள் தேவையான 90 சதவித அடிப்படை வசதியை செய்துள்ளோம் வெகு விரைவில் மக்களுக்கு பயன்தரும் வகையில் ஏடிஎம் மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.