சண்டிகரில் மாவோயிஸ்ட் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 9 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சண்டிகர் மாநிலம் சுக்மா மாவட்டம் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ள பகுதி. இந்தப் பகுதியில் இன்று காலை துணை ராணுவ படைப்பிரிவு 208க்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே இன்று காலை தாக்குதல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இன்று மதியம் படைப்பிரிவு 212ஐச் சேர்ந்த 10 வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற சுரங்கப் பாதுகாப்பு வாகனம் செல்லும் பாதையில் பதுக்கி வைக்கப்பட்ட வெடிகுண்டுகளை மாவோயிஸ்டுகள் வெடிக்கச் செய்தனர். இந்தத் தாக்குதலில் ராணுவ வாகனத்தில் இருந்த 9 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.
சண்டிகர் மாநில நக்ஸல் தடைப்பிரிவு காவல் உயரதிகாரி அவஸ்தி கூறுகையில், ‘சுக்மா மாவட்டத்தில் 10 ராணுவ வீரர்களை ஏற்றிச்சென்ற சுரங்கப் பாதுகாப்பு ராணுவ வாகனத்தின் மீது, மாவோயிஸ்டுகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் இறந்திருக்கக்கூடும் என தெரிகிறது. கூடுதல் படையினரும், மீட்புப் பணிக்கான ஹெலிகாப்டர்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன’ என தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் தேசத்திற்காக வீரமரணம் அடைந்த வீரர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.