பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 14 வங்கிகளில் 824 கோடி மோசடி செய்த வழக்கில் கனிஷ்க் நகை நிறுவன உரிமையாளர் பூபேஷ்குமார் ஜெயின் சென்னையில் கைது செய்யப்பட்டார். வங்கிகளில் மோசடி செய்த வழக்கில் இந்த அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பூபேஷ்குமார் ஜெயினை ஜூன் மாதம் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, எச்.டி.எஃப்.சி., பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 14 வங்கிகள் கனிஷ்க் நிறுவனத்துக்கு 824 கோடியே 15 லட்சம் ரூபாய் கடனாகக் கொடுத்துள்ளன. கடனுக்கு பல மாதங்களாக வட்டி கட்டப்படாததையடுத்து எஸ்.பி.ஐ வங்கி தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு சி.பி.ஐ.க்கு புகார் கடிதம் அனுப்பியது.
இதையடுத்து, கனிஷ்க் உரிமையாளர் பூபேஷ்குமார், அவரது மனைவியும் இயக்குநருமான நீதா ஜெயின், பங்குதாரர்களான தேஜ்ராஜ் அச்சா, அஜய் குமார், சுமித் கேடியா உள்ளிட்ட 6 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கின் கீழ் பூபேஷ் குமாரின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனை மற்றும் விசாரணைக்கு பின்னர் பூபேஷ்குமார் கைது செய்யப்பட்டார்.