Skip to main content

ஸ்டெர்லைட்க்கு எதிராக போராடிய மருத்துவ மாணவர் உள்பட 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது..!

Published on 16/06/2018 | Edited on 16/06/2018
medical student


தூத்தக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மருத்துவ மாணவர் உள்பட 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் வேதிக் கழிவுகளாலும், மாசடைந்த காற்றாலும் தங்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக சுற்றுவட்டார கிராம மக்கள் பல ஆண்டுகளாக குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், அந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி, தூத்துக்குடி சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர்.

 

 

கடந்த மே 22ஆம் தேதி 100வது நாள் போராட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை முற்றுகையிட தூத்துக்குடி சுற்றுவட்டார கிராம மக்கள் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றாக இணைந்து அமைதியாக பேரணியாக சென்றனர். அப்போது பேரணியாக சென்ற மக்களை தடுக்க போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்தார். மேலும் உயிரிழந்தவர்களுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவியும் அறிவித்தார்.

இந்த நிலையில் வன்முறையில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட சில அமைப்புகளை சேர்ந்த முக்கிய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த கலில்ரகுமான் (வயது47), அவரது மகன்கள் முகமது அனாஸ் (22), முகமது இர்ஷாத் (20), மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த கோட்டயன், கோவில்பட்டியை சேர்ந்த சரவணன், நெல்லை ஆலங்குளத்தைச் சேர்ந்த வேல்முருகன் ஆகிய 6 பேரை கைது செய்த நெல்லை போலீசார் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

கைதான முகமது அனாஸ் கன்னியாகுமரியில் ஹோமியோபதி மருத்துவ படிப்பு படித்து வருகிறார். அவரது சகோதரர் முகமது இர்ஷாத் நெல்லை பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். கலில்ரகுமான், அவரது மகன்கள் முகமது அனாஸ், முகமது இர்ஷாத் ஆகிய 3 பேரும் மக்கள் அதிகாரம் அமைப்பில் செயல்பட்டு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த 22-ந்தேதி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் மீதான தாக்குதலில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஒரே குடும்பத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால் கலில் ரகுமானின் மனைவி நசீபா பானு, கைதான 3 பேரின் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

சார்ந்த செய்திகள்