அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாயிட் என்ற கருப்பினத்தை சேர்ந்த இளைஞரை, காவல்துறை அதிகாரி ஒருவர் அடித்து கொன்றுள்ளார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மனநல மருத்துவர் ஷாலினியிடம் பல்வேறு கேள்விகளை நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,
அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாயிட் என்பவரை அமெரிக்க காவல்துறை அதிகாரி ஒருவர் அடித்துக்கொன்றுள்ளார். நிறவெறியே இந்த கொலைக்கு காரணம் என்று பொதுவாக சொல்லப்படுகின்றது. ஜார்ஜ் பிளாயிட்க்கு ஆதரவாக ட்விட்டர் போன்ற சமூக தளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
நாம் ரொம்ப காலமாக பேசிக்கொண்டிருக்கின்ற சமூக அநீதிதான் இந்த விஷயம். நம்ம ஊரில் வேறு மாதிரியான இன வெறி இருக்கின்றது என்றால், அமெரிக்காவில் வேறு விதமான தன்மையில் இது வெளிப்படுகின்றது. இந்த விஷயமே இனவெறியின் வெளிப்பாடுதான். கருப்பினத்தவர்களுக்கு எதிராக நீண்ட நாட்களாக காட்டப்படும் வெறுப்புணர்ச்சியின் அடையாளமாகத்தான் இதை பார்க்க வேண்டும். அமெரிக்காவில் இந்த போராட்டம் நீண்ட நாட்களாக நீடித்து வருகின்றது. 17ம் நூற்றாண்டில் இருந்து இத்தகைய போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மார்டின் லூதர் கிங், ஆபிரஹாம் லிங்கன் முதலியவர்கள் இதற்காக தொடர்ந்து போராடி வந்தார்கள். ஆனால் அவர்கள் எல்லோரையும் கொன்றுவிட்டார்கள். இந்த அளவில்தான் அமெரிக்காவில் கருப்பினத்தவர்களின் உரிமைகள் இருக்கின்றது.
அங்கே இருக்கின்ற தாய்மார்கள்கூட தொப்பி போட்டுக்கொண்டு செல்லாதீர்கள் என்று சொல்வார்களாம். யாரென்று தெரியாமல் கொன்று விடுவார்கள் என்பதற்காக இப்படி தாய்மார்கள் கூறுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தியர்களும் ஏறக்குறைய அந்த நிறத்திலேயே இருப்பதால் தாய்மார்கள் எங்கே தங்கள் குழந்தையையும் கருப்பினத்தவர்கள் என்று நினைத்து சுட்டுவிடுவார்களோ என்று பயப்படுகிறார்கள். அதனால்தான் அவர்களை பேசும்போதுகூட கருப்பினத்தவர்கள் நின்று நினைக்காதப்படி பேசுமாறு குழந்தைகளுக்கு அங்கே வசிக்கும் அம்மாக்கள் சொல்லித்தருகிறார்கள்.
கரோனா காலகட்டம் மனித தன்மையை உலுக்கி வருகின்றது. சக மனிதனை மனிதனாக பார்க்க வேண்டும் என்பதை அது நமக்கு சொல்லி வருகின்றது. விரைவில் அமெரிக்க தேர்தல் வருகின்ற நிலையில், இந்த தாக்குதலை எப்படி பார்க்க வேண்டியுள்ளது?
இவ்வளவு பெரிய இக்கட்டான நேரத்தில்கூட அந்த வெள்ளை அமெரிக்கர்களுக்கு மனித தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் வரவில்லையே, அந்த எண்ணம்தானே இந்த சம்பவத்தின் வேர். இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் அதுதானே அடிப்படையாக இருக்கின்றது. இந்த சம்பவத்தின் காரணமாக அங்கே எழுச்சி வந்துவிட்டது. கருப்பு உயிர் உங்களுக்கு முக்கியம் இல்லையா என்ற கேள்வி அங்கே ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. இந்த எழுச்சி என்பது இயற்கையாக வந்த ஒன்றுதான். யாரும் திட்டமிட்டு எதையும் செய்யவில்லை. பொறுத்தது போதும் என்று தற்போது பொங்கி எழுந்துள்ளார்கள். இது தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் அவர்கள் அஞ்சி நடுங்குகிறார்கள்.