Skip to main content

மதிப்பெண்ணை விலை கொடுத்து வாங்கலாம் என்ற சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளார்கள் - ராஜேஸ்வரி பிரியா குற்றச்சாட்டு!

Published on 16/06/2020 | Edited on 16/06/2020

 

gh


கரோனாதொற்று காரணமாக 10ஆம் வகுப்புத் தேர்வை தமிழக அரசு ரத்து செய்து அனைவரையும் தேர்ச்சி செய்துள்ளது. மேலும் மாணவர்களின் மதிப்பெண்ணை காலாண்டு, அரையாண்டு, மற்றும் வருகைப் பதிவேட்டைக் கொண்டு நிர்ணயம் செய்யலாம் என்ற உத்தரவையும் பிறப்பித்தது. இதனால் சில தனியார் பள்ளிகள் மாணவர்களின் பெற்றோரிடம் பணம் பெற்றுக்கொண்டு அதிக மதிப்பெண் வாங்குவதற்கான நடைமுறைகளைத் துவக்கியுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதைப் பற்றிய நம்முடைய கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறார் ராஜேஸ்வரி பிரியா. நம்முடைய கேள்விக்கு அவரின் பதில்கள் வருமாறு, 

 


கரோனா தொற்று அதிகரித்து வரும் இந்தக் காலகட்டத்தில் குறிப்பாக இந்த லாக் டவுன் நேரத்தில் குறிப்பாகச் சுதந்திரத்தை அனுபவிப்பது மாணவர்கள் என்று சொல்லலாம். மற்றொருபுறம் கல்வி ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதும் மாணவர்கள் என்று சொல்லலாம். தமிழக அரசு எப்படியாவது 10ஆம் வகுப்புத் தேர்வை நடத்திட வேண்டும் என்று கடுமையான முயற்சிகளை எடுத்தார்கள். ஆனால் தெலுங்கானா மாநிலத்தில் ஆல்பாஸ் என்ற முடிவை எடுத்தார்கள். தமிழ்நாடும் அதன் பிறகு ஆல் பாஸ் என்ற முடிவை எடுத்தார்கள். மதிப்பெண்களும் எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். இதைப்பற்றி உங்களின் கருத்து என்ன? 

இன்றைய சூழ்நிலையில் கரோனா வேகமாகப் பரவி வருகின்றது. மாணவர்களின் நோய் எதிர்ப்பு திறன் எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியாது. இந்த 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்த போது நம் அனைவருக்கும் ஒரு பெற்றோராய் நமக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மாணவர்கள் காப்பாற்றப்பட்டதைப் போன்ற உணர்வு நம் அனைவருக்கும் ஏற்பட்டது. மாணவர்கள் பெரும்பாலும் பிரஷர் அனுபவித்துவிட்டார்கள். கடந்த மூன்று மாதங்களாகவே அவர்கள் அழுத்தத்தில் இருந்தார்கள். தற்போது கல்வி வியபாரம் ஆனதால்  10 ஆம் வகுப்பு மதிப்பெண்ணைப் பணம் கொடுத்து வாங்கலாம் என்ற சூழ்நிலை கடந்த இரண்டு நாட்களாக நிலவுகிறது என்பதை எங்களை எல்லாம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

நீங்கள் மேலோட்டமாகக் குற்றச்சாட்டுகளை வைத்துவிடமுடியாது இல்லையா? அதற்கான ஆதாரங்களை இருக்கின்றதா?  

 


தனியார்ப் பள்ளிகளில் இந்த மாதிரியான வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக எனக்குத் தகவல்கள் வந்திருக்கின்றது. நிறைய பெற்றோர்கள் நன்றாகப் படிக்காத மாணவர்களைக் கூட அதிக மதிப்பெண் தருவதற்குப் பல ஆயிரம் பணம் கேட்பதாக என்னிடம் கூறுகிறார்கள். எல்லாத் தனியார் பள்ளிகளையும் அதுமாதிரி சொல்ல முடியாது. ஆனால் ஒரு பள்ளி செய்தாலும் அது துரோகம் தானே? தற்போது கல்வி வியபாரம் ஆனதால் அரசின் தற்போதைய முடிவு சோகத்தை ஏற்படுத்துகின்றது. 

பணம் இருப்பவர்கள் மதிப்பெண்ணை விலை கொடுத்து வாங்கலாம் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். எங்களால் இதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை. நன்றாகப் படிக்கும் மாணவர்கள் இருக்கும் இடத்தில் நன்றாகப் படிக்காத மாணவர்களும் அதே குரூப்பில் இடம் பிடித்துப் படிப்பது என்பது சரியான முறையா? இது சமூக நீதிக்கு எதிரான ஒன்றாகத்தானே இருக்கின்றது. பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுவிடும். அதையும் தாண்டி மாணவர்களை இது குற்றவாளிகளாக மாற்றிவிடும் தன்மை உடையது. 

பணம் கொடுத்து அவர்களுக்குப் பள்ளியில் இடம் வாங்கிக் கொடுத்தால் எதிர்காலத்தில் அந்த மாணவர்கள் எப்படி நல்ல குழந்தைகளாக வளர்வார்கள். பணம் இருந்தால் போதும் எதையும் சாகிக்கலாம் என்று குழந்தைகளுக்கு மனதில் நஞ்சை விதைக்க பெற்றோர்களே உடந்தையாக இருப்பதை என்ன சொல்ல முடியும். பள்ளி நிர்வாகத்தின் மீது எந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதே அளவிற்குப் பெற்றோர்களின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 

http://onelink.to/nknapp


டொனேஷன் கொடுத்து சீட் வாங்குவது என்ன தமிழகத்தில் புதிதான ஒன்றா?

கல்வியைப் பற்றிப் பேச வேண்டும் என்றால் அதில் நிறைய அரசியல் இருக்கின்றது. பெரும்பாலான அரசியல்வாதிகள் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். அவர்கள்தான் இந்தக் கல்வியை அரசியல் ஆக்கியவர்கள். முக்கால்வாசி அரசியல்வாதிகள் கைகளில்தான் பொறியல் கல்லூரிகள், தனியார் பள்ளிகள் இருப்பது என்பது தமிழகத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்தச் சூழ்நிலையை அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் ஆரம்பித்ததால் தான் கேள்வி கேட்க யாரும் ஆளில்லாமல் இருக்கிறார்கள்.
.