கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா உள்ளிட்ட பல படங்களின் கதையாசிரியரும் எழுத்தாளருமான ரத்னகுமார், இந்திய சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாறு, குற்றப்பரம்பரை சட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நக்கீரனிடம் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், இந்தியாவின் வளங்களை வெள்ளைக்காரன் எப்படி கொள்ளையடித்தான் என்பது குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
”பெங்காலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த வெள்ளைக்காரன் ஒருகட்டம் வரை வட இந்தியாவில்தான் அதிக கவனம் செலுத்தினான். பிற்பாடுதான், தென்னிந்தியா பக்கம் தன் கவனத்தை திருப்பி இங்குள்ள வளங்களைச் சுரண்ட ஆரம்பிக்கிறான். தஞ்சை நெல், திருச்சி நெல், திருநெல்வேலி நெல், தூத்துக்குடி முத்து ஆகியவைதான் வெள்ளைக்காரனின் முக்கிய வருவாய் ஆதாரமாக இருந்தன. அதேபோல கர்நாடகா, பஞ்சாப்பிலும் அவனுக்கு நிறைய வருவாய் ஆதாரங்கள் இருந்தன. இங்கிருந்தெல்லாம் வளங்களைக் கொள்ளையடித்து, பெங்காலில் குவித்தான். அவை அனைத்தும் அங்கிருந்து கப்பல் மூலமாக லண்டனுக்கு அனுப்பப்பட்டது. பெங்கால் துறைமுகத்திலிருந்து கிளம்பினால் ஆறு மாதங்களில் லண்டன் சென்றடைந்துவிடலாம். பெங்காலை வெள்ளைக்காரன் தலைமையிடமாக தேர்ந்தெடுத்ததற்கும் அதுதான் முக்கிய காரணம்.
கப்பல் என்றால் ஒன்று இரண்டல்ல. அங்கிருந்து 10 கப்பல்கள் வரை ஒரே நேரத்தில் கிளம்பிவரும். பருத்தி, மாங்காய், கைத்தறி துணி, உப்பு, சாயங்கள் முதற்கொண்டு இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும். இந்தியாவில் இருந்த மிளகும் ஏலக்காயும்தான் வெள்ளைக்காரனை இந்தியா பக்கம் இழுத்துவந்தது. பருத்தியும் மிளகாயும்தான் தென்னிந்தியா நோக்கி அவனை இழுத்தது. இங்கிருந்து எடுத்துச் செல்லப்படும் பொருட்கள் லண்டனில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கும், அங்கிருந்த மக்களுக்கும் விநியோகிக்கப்பட்டன. சில பொருட்கள் லண்டன் சந்தையில் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்ட மரங்களை யூரோப் மார்க்கெட்டில் விற்று கொள்ளைக்காசு சம்பாதித்திருக்கிறான். நம்முடைய தேக்கு, அகில், தோகத்தி மரங்களுக்கெல்லாம் ஐரோப்பாவில் நல்ல மார்க்கெட் இருந்துள்ளது”.