தேர்தல் களத்தின் கடைசிநேர கவனிப்புகளால் இடைத்தேர்தல் தொகுதிகளில் 12-ல் வெற்றி பெறலாம் என்ற கணக்கு எடப்பாடி மனதில் ஓடினாலும், அதற்கு மாறான கணக்கு களும் உள்ளன. அதன் விளைவுதான், தினகரன் அணியில் உள்ள 3 எம்.எல்.ஏ.க்களுக்கான நோட்டீஸ் என்கிறது கோட்டை வட்டாரம். தமிழக சட்டமன்றத்தில் அ.தி.மு.க.வின் தற்போதைய பலம் 114. தேர்தல் முடிவுகள் மே 23-ல் அறிவிக்கப்பட்ட பிறகு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 இடங்கள் தேவை. அந்த வகையில், 22 தொகுதி இடைத்தேர்தலில் 4 தொகுதி களை ஜெயித்தால் போதுமானது. ஆனால், அ.தி.மு.க.வின் இரட்டை இலையில் வெற்றி பெற்ற தோழமைக் கட்சி எம்.எல்.ஏ.க்களான தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் மற்றும் தினகரன் ஆதரவு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகிய 6 எம்.எல்.ஏ.க்கள் எதிராக நின்றால் எடப்பாடிக்கு 10 எம்.எல்.ஏ.க்கள் தேவை.
இதில் தனியரசு, அ.தி.மு.க. அணியில் இருக்கிறார். தினகரன் பக்கம் காற்றடிக்கும் கருணாசும்கூட சட்டமன்றத்தில் எடப்பாடியை ஆதரிக்கத் தயார். பா.ஜ.க. கூட்டணியை ஏற்க முடியாமல் தி.மு.க. அணியை ஆதரித்த தமீமுன் அன்சாரியும் நடவடிக்கையைத் தவிர்க்கும் வகையில் எடப்பாடியுடன் சமாதானமாகிவிட்டார். இந்நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான அஸ்திரத்தை ஏவுவதற்கு முன்பு சபாநாயகர் தனபாலிடம் எடப்பாடி கலந்தாலோசித்தது பற்றி நம்மிடம் பேசிய அ.தி.மு.க. சீனியர்கள், ""ஏற்கனவே அந்த மூவர் மீது கொறடா புகார் கொடுத்திருந் தாலும், தற்போது தேர்தல் ஆணையத்தில் முறைப்படி அ.ம.மு.க.வை தினகரன் பதிவு செய்திருப்பதால் புதிதாக புகார் கொடுப்பதுதான் சரியானது'' என சொல்லியிருக்கிறார் தனபால்.
இதனையடுத்து சட்ட அமைச்சர் சி.வி. சண்முகத்திடமும் கொறடா ராஜேந்திரனிடமும் விவாதித்து, புதிய புகார் தரப்பட்டு, சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. விரைவில் விளக்க நோட்டீஸ் அனுப்புவார் சபாநாயகர். மூவரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்பது எடப்பாடியின் நோக்கமாக இல்லை. "பதவியை பறித்துவிடுவோம்' என மிரட்டுவதுடன், "கொறடாவுக்கு எதிராக செயல்படமாட்டோம்' என எழுத்துப்பூர்வமாக அவர்களைப் பணியவைத்து தனது பிடியில் வைத்துக் கொள்வதுதான் எடப்பாடியின் திட்டம்'' என்கின்றனர்.
இதுகுறித்து எம்.எல்.ஏ. கலைச்செல்வனிடம் கேட்டபோது, "தினகரனின் ஆதரவாளர்களாக நாங்கள் இருந்தது உண்மைதான். ஆனால் நான் அ.தி.மு.க. உறுப்பினர்தான். அ.ம.மு.க.வின் உறுப்பினராக நான் இல்லை. எடப்பாடி ஆட்சிக்கு எதிராக நான் செயல்படப் போவதுமில்லை. இதுவரை நடந்துகொள்ளவும் இல்லை. அப்படியிருக்க, எனது எம்.எல்.ஏ. பதவியை எப்படி பறிக்க முடியும்? இதே சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி தனது ஆட்சிக்கான பெரும்பான்மையை நிரூபிக்க நடத்திய வாக்கெடுப்பில், கொறடாவின் உத்தரவை மீறி, ஓ.பி.எஸ்., செம்மலை, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடிக்கு எதிராக கை தூக்கினார்கள். அவர்களது பதவியைத்தானே முதலில் பறித்திருக்க வேண்டும்? ஆனால், அவர்களில் இருவர் கேபினெட்டில் இருக்கிறார்கள். சபாநாயகரிடமிருந்து நோட்டீஸ் வந்தால் சரியான விளக்கத்தை தருவேன். எந்த சூழலிலும் எங்கள் பதவியை சபாநாயகரால் பறிக்க முடியாது''‘என்கிறார் உறுதியாக. 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை அந்த எம்.எல்.ஏ.க்களே விரும்பமாட்டார்கள் என்பதால் பிரச்சனைக்குரிய மூவரையும் அ.தி.மு.க. உறுப்பினராகவே செயல்பட அனுமதித்திருக்கிறார் தினகரன்.
உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "இடைத்தேர்தலில் தேவையான பெரும்பான்மைக்கு அதிகமான எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைத்ததும், தினகரன் ஆட்களை சட்டமன்றத்திலிருந்து அப்புறப்படுத்தி அவருக்கு அதிர்ச்சியைக் கொடுக்க நினைக்கிறார் எடப்பாடி. அந்த 3 இடங்களிலும் தனக்கு நம்பிக்கையான நபர்களை நிறுத்தி ஜெயிக்க வைக்க வேண்டுமென்பதே எடப்பாடியின் நோக்கம். இந்த மூவரையும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களாக தொடர அனுமதித்தால் பெரும்பான்மைக்கு 4 இடைத்தேர்தல் தொகுதிகள் வேண்டும். அதுவே, மூவரது பதவியைப் பறித்தால் பெரும்பான்மைக்கு 3 இடங்களே போதுமானது.
அதேசமயம், 22 தொகுதிகளையும் தி.மு.க. ஜெயித்து ஆட்சி மாற்றத்துக்கு வழி உருவானால், தனக்கே பெரும்பான்மை இருப்பதாகச் சொல்லி, அதனை நிரூபிக்க கவர்னரிடம் வாய்ப்பு கேட்பார் முதல்வர். காரணம், இடைத்தேர்தலில் முழுமையாக தி.மு.க. ஜெயித்தாலும் காங்கிரசின் 8 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன்தான் அது ஆட்சியமைக்க முடியும். கூட்டணி ஆட்சிக்கு தி.மு.க. ஒப்புக்கொள்ளாது. அந்த சமயத்தில், "கூட்டணி ஆட்சியில் பங்கு தருகிறோம்' என அ.தி.மு.க. தரப்பில் தூண்டில் போட்டு, 50 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சியில் இல்லாத காங்கிரசை இழுக்க எடப்பாடி முயற்சிப்பார். பெரும்பான் மையையும் நிரூபிப்பார் எடப்பாடி. ஒருவேளை காங்கிரஸ் ஒப்புக்கொள்ளாது போனால், கர்நாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதாக சட்டமன்றத்தைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளாமலே ஆட்சியை கலைத்த எடியூரப்பா பாணியில் தனது கேபினெட்டை கலைக்கும் யோசனையும் எடப்பாடியிடம் இருக்கிறது''‘என்கிறார்கள்.