சமீபத்தில் நடிகை ஒருவர் தன்னுடைய விவாகரத்தைக் கொண்டாடி போட்டோஷூட் செய்து வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இதுகுறித்தும் விவாகரத்து குறித்தும் தன்னுடைய கருத்துக்களை எழுத்தாளர் லதா நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
ஆண் தன்னுடைய சொத்துக்களைத் தன்னுடைய குழந்தைகளுக்கு மட்டும் கொடுக்க வேண்டும் என்பதற்காக, அவனுக்கு நம்பிக்கை ஏற்படுவதற்காகப் பெண்ணின் மீது திணித்தது தான் கற்பு என்பது. ஆணாதிக்கம் வளர்ந்ததும், பெண்ணடிமைத்தனம் பிறந்ததும் அங்குதான். ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்விலும் இந்த சமூகம் உள்ளே புகுந்து கருத்து சொல்வது தேவையற்றது. விருப்பம் இல்லாமல் பல திருமணங்கள் இங்கு நடத்தப்படுகின்றன. ஆனால் அவை குறித்து யாரும் இங்கு விமர்சனம் செய்வதில்லை.
தனிப்பட்ட மனிதர்கள் விவாகரத்து செய்வது குறித்து அனைவரும் விமர்சனம் செய்கின்றனர். பிடிக்காத திருமணத்திலிருந்து வெளியேறுவது என்பது மனிதர்களுக்கு மிகப்பெரிய ஆசுவாசம் தரக்கூடியது. பிடிக்காத திருமணங்களை நம்மால் கொண்டாட முடியும்போது, பிடித்த விவாகரத்தை ஏன் கொண்டாடக்கூடாது? இன்றும் நம்முடைய சட்டத்தில் விவாகரத்து என்பது எளிதான விஷயம் கிடையாது. விவாகரத்து என்பது தனிப்பட்ட விருப்பம். இதில் மற்றவர் கருத்து சொல்வதற்கு எந்த இடமும் இல்லை.
மகிழ்ச்சியை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி வெளிப்படுத்துவார்கள். அந்தப் பெண் தன்னுடைய மகிழ்ச்சியை அதீத உற்சாகத்துடன் வெளிப்படுத்தினாலும் அதைக் கேள்வி கேட்கும் உரிமை நமக்கு இல்லை. திருமணத்தில் அந்தப் பெண் சந்தித்த பிரச்சனைகள் என்னென்ன என்பது குறித்து யாருக்கும் தெரியாது. விவாகரத்து என்றாலே பெண் மீது குற்றம் சுமத்தும் மனநிலை தான் சமூகத்தில் இருக்கிறது. இன்று உலகம் சுருங்கிவிட்டது. அனைவருடைய செயல்களும் வெளியே வருகின்றன. அதுபோன்ற ஒன்றுதான் இது என்று கடந்து செல்ல வேண்டும். அவருடைய கோபத்தை அவர் வெளிக்காட்டியுள்ளார்.
எந்த மதமும் மனிதர்களை நிம்மதியாக வாழ விடுவதில்லை. நல்லவை அனைத்தும் கடவுளால் தான் நிகழ்கிறது என்றால் தீயவையும் கடவுளால் தான் நிகழ்கிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். குடும்பங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நாம் ஏன் முடிவு செய்கிறோம்? மாற்றம் என்பது எப்போதுமே நிகழக்கூடியது தான். குடித்துவிட்டுத் தவறு செய்வது என்பது ஆண்கள் சொல்லும் சாக்கு தான். மனதுக்குள் அவர்களுக்கு இருக்கும் வன்மம் தான் குடிக்கும்போது வெளிவருகிறது. மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காகத் தான் திருமணம் செய்கிறோம். அப்படி மகிழ்ச்சியாக அது அமையவில்லை என்றால் விவாகரத்தையும் சாதாரணமாகத் தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
திருமணம் என்பது தொடங்கும்போதே இணையரின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதாகத் தான் அமைகிறது. இதைச் செய்யாதே அதைச் செய்யாதே என்று பெண்ணை ஆண் கட்டுப்படுத்துவது தான் பெரும்பாலும் நடக்கிறது. சொல்வதையெல்லாம் கேட்கும் ஒரு பொம்மையாகத் தான் பெண்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். நம்பிக்கை இல்லாமல் இருக்கும்போது எதற்காக உறவு இருக்க வேண்டும்? பெண்களுக்கும் பெர்ஸ்னல் ஸ்பேஸ் என்கிற ஒன்று இருக்கிறது. அதை ஆண்கள் உணர வேண்டும்.