Skip to main content

எமோஜிக்கள் சூழ் உலகு...  ஆதியை நோக்கித் திரும்பும் மனிதன்?   

இந்த உலகம் தோன்றி, மொழிகள் பிறப்பதற்கு முன், கண் ஜாடை, கை ஜாடை மொழிகளை பேசிய மனித இனம் எந்த எழுத்துக்களைப் பயன்படுத்தி வரலாற்றைப் பதிவு செய்திருக்கும் என்ற கேள்விக்கு அறிவியல் சொல்கிறது 'பிக்ட்டோக்ராம்' (Pictogram) எனப்படும் சித்திர எழுத்துக்களைத்தான் முதலில் பயன்படுத்தினர் என்று.

 

emojeesமாயன்களின் நாட்காட்டியும், எகிப்திலும், சுமேரியாவிலும் ,வட அமெரிக்காவிலும் 1500களில் பயன்படுத்தப்பட்ட சித்திர எழுத்துக்களால் ஆன சான்றுகள் இன்று வரை உள்ளது. பிறகு நாகரிக வளர்ச்சியால் மனிதன் பல மொழிகளை உருவாக்கி அதில் மாற்றங்களைக் கொண்டுவந்து எழுத்துருக்களைத் தோற்றுவித்து செழுமைப் படுத்தினான் என்பது நாம் அறிந்ததே.

இத்தனை மொழிகள், இத்தனை நாகரிகம், இத்தனை பண்பாடு என அத்தனையும் வளர்ந்த பின் மீண்டும் காலச்சக்கரத்தின் சுழற்சியில் அதே ஆதி மொழியான சித்திர மொழிகள் மீண்டும் புதுப்பொலிவுடன் 'எமோஜி' எனும் பெயர் தாங்கி இன்றைய இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த எமோஜிக்கள் நம் உணர்வுகளை உருமாற்றம் செய்யாமல் அப்படியே காட்டுவதால் உலகம் முழுவதும் உள்ள பல மொழிகளில் குறுஞ்செய்தி அனுப்பும் மக்களுக்கான பொது மொழியாக எமோஜிக்கள் உள்ளன.


இந்த நவீன எமோஜிக்களின் பிறப்பிடம் ஜப்பான். ஜப்பான் நாட்டில் 1998ம் ஆண்டு NTT DOCOMO எனும் செல்போன் நிறுவனத்திற்காக ஷிகேடிகா குரிடா (shigetaka kurita) என்னும் தொழில்நுட்ப விஞ்ஞானியின் உழைப்பில் பிறந்ததுதான் இந்த எமோஜிக்கள். சீன எழுத்துக்களாகவும் குறியீடுகளாகவும் உருவான எமோஜிக்கள் காலப்போக்கில், மனித உணர்வுகளைக் குறிக்கும் சித்திரமாகவும், பல்வேறு காலநிலை, பழங்கள், ஹார்ட்டின்கள், என பல வடிவங்களில் எமோஜிக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

  emoji finderஇந்த எமோஜிக்கள் யுனிகோட் வடிவில் பதிவேற்றம் செய்யப்பட்டு எல்லா மென்பொருள் இயங்குதளத்திலும் பயன்படுகிறது.எமோஜிக்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்ததில் ஆப்பிள் நிறுவனத்திற்கு முக்கிய பங்கு உண்டு.ஆப்பிள் நிறுவனம் தனது MAC இயங்குதளத்திற்கு வடிவமைத்த நாள்காட்டி எமோஜியில் அது வெளியிடப்பட்ட நாளான ஜுலை 17 2002 என்ற நாளைக் காட்டும்படி வடிவமைத்தது. அதனால் ஆண்டு தோறும் ஜுலை 17ம் நாள் உலக எமோஜி தினமாகக் கொண்டாடப்படுகிறது. மைக்ரோசாப்ட், பேஸ்புக் ,வாட்ஸ் அப் போன்ற நிறுவனங்களும் தன் பங்கிற்கு பல புதிய எமோஜிக்களை யுனிகோட் வடிவில் வெளியிட்டுள்ளது.


பல எமோஜிக்கள் இருந்தாலும் சிரித்துக் கொண்டே அழும் எமோஜிதான் உலக அளவில் மிகப் பிரபலம், அதற்கு சான்றாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தனது அகராதியில் இந்த எமோஜிக்கான வார்த்தையாக "Face of joy with tears" என்பதை 2015ம் ஆண்டுக்கான புதிய வார்த்தையாக வெளியிட்டது. கடந்த ஆண்டு மிச்சிகன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் உலகம் முழுவதும் 1.2 பில்லியன் குறுஞ்செய்திகள் எமோஜிக்களைக் கொண்டு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கிறது.

  emojiமேலும் அதிகம் பயன்படுத்தும் எமோஜிக்களாக  'சிரித்துக்கொண்டே அழும் ஸ்மைலியும்' 'ஹார்ட்டின் ஸ்மைலியும்' 'கண்களில் ஹார்ட்டின் உள்ள ஸ்மைலியும்' முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளது. இன்னமும் எமோஜிக்களைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் பல தகவல்களை விக்கிப்பீடியா தெரிவிக்கிறது. மிக நீண்ட நேரம் தட்டச்சு செய்து அனுப்ப வேண்டிய செய்தியை ஒரே புகைப்படத்தில் சொல்லிவிடும் இந்த எமோஜிக்கள் ஆங்கிலம் தெரியாதவர்களுக்கும், நேரத்தை மிச்சப்படுத்த நினைப்பவர்களுக்கும் கிடைத்த வரம் என்றே சொல்லலாம்.

"கண்ணோடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் 
என்ன பயனும் இல"
என்பதைப்போல எமோஜிக்கள் வந்த பிறகு எழுத்துகள் அதிகம் பயன்படுவதில்லை. புன்னகை நிறைந்த உலகத்தை உருவாக்குவதில் இந்த ஸ்மைலிக்களுக்கும்  ஒரு சிறிய இடம் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்