Skip to main content

'தலைவர்' ஸ்டாலின் இவற்றையெல்லாம் சாதிப்பாரா? 
'தளபதி' இன்று 'தலைவர்' ஆகியிருக்கிறார். திமுகவினர் கொண்டாட்டமாயிருக்கின்றனர். எளிதில் கிடைத்துவிடவில்லை, என்றாலும் இதை விடப் பெரிய சவால்கள் வெளியே இருக்கின்றன. கட்சியில் மூத்த, முக்கிய தலைவர்களின் அன்பைப் பெற்றுவிட்டார். திமுக தொண்டர்களின் விருப்பமும் அவர்தான். அழகிரி பிரச்சனை தொடர்ந்தாலும் அது கட்சிக்குள் பெரிதாக எதிரொலிக்காது என்பது தெரிகிறது. பிற கட்சிகளுடனான உறவு, தேசிய கட்சிகள் தொடர்பு என திமுகவிற்கான அனைத்து செயல்பாடுகளையும் சில ஆண்டுகளாக முழுமையாக முன்னெடுப்பதனால் அந்த சவால்களும் அவருக்குப் பழக்கமானவையே. இவற்றையெல்லாம் தவிர்த்து மக்கள் மேடையில்தான் உண்மையான சவால்கள் அவருக்கிருக்கின்றன.

 

mkstalinதமிழகத்தின் தவிர்க்க முடியாத அரசியல் தலைவர்களுள் ஒருவராக ஸ்டாலின் இருக்கிறார். மக்கள் அன்பைப்  பெற்ற கட்சித் தலைமையும் இல்லை, மதிக்கத்தக்க வகையில் ஆட்சியுமில்லை என்று அ.தி.மு.க இருக்கும் நிலையில், அதற்கு மாற்றாக மக்கள் நினைப்பவர்களில் முதலில் இருப்பவர் ஸ்டாலின். சமூக நீதி போராட்டங்கள், இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் ஆகியவற்றை பார்த்திராத இன்றைய தலைமுறையின் பார்வையில் ஸ்டாலின் யார்? இந்தத் தலைமுறையின் ஆதரவைப் பெறும் பயணத்தில் ஸ்டாலினுக்கு உள்ள சவால்கள் என்ன?

 

 • 1967ல் இந்திய துணைக் கண்டம் முழுவதும் தன் ஆளுமையைக் கொண்டிருந்த காங்கிரசை, தமிழகத்தில் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றிய போது, திமுக தமிழகம் தேடிய மாற்றமாக இருந்தது. காங்கிரசின் பண்ணையார்கள், பணக்காரர்களை நடுங்க வைத்த பாட்டாளிகளாக இருந்தனர் திமுகவின் மாவட்ட செயலாளர்களும் நிர்வாகிகளும். ஆனால், இந்தத் தலைமுறை பார்க்கும் திமுகவின் மாவட்டச் செயலாளர்களும் நிர்வாகிகளுமோ கல்லூரிகளுக்கு சொந்தக்காரர்கள், தொழிலதிபர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள். சாதாரண மக்களுக்கான கட்சியாக, பெரும் பின்புலன் இல்லாத இளைஞர்களும் செயல்படக்கூடிய கட்சியாக திமுக இருக்கிறதா என்பதையும், மக்களுக்கு நெருக்கமாக திமுக நிர்வாகிகள் இருக்கிறார்களா என்பதையும் உறுதி செய்து, இளைஞர்களிடம் அந்த நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

   
 • 2006-11 கடைசியாக தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்த காலகட்டம். 2ஜி ஊழல் வழக்கு, இலங்கையில் இறுதி யுத்தம் உச்சத்தில் இருந்த பொழுது எதிர்பார்த்த வேகத்தில், தீவிரத்தில் செயல்படவில்லை என்ற பெயர், மாவட்டங்களில் அமைச்சர்கள் மீதான நில அபகரிப்பு, தொழில் அராஜக புகார்கள், திருமங்கலம் ஃபார்முலா என இவைதான் திமுகவின் கடைசி ஆட்சி புதிய வாக்காளர்களிடம் விட்டுச் சென்ற தடங்கள். மெச்சத்தக்க ஆட்சியைத் தராத அதிமுகவையே மீண்டும் மீண்டும் அரியணையில் ஏற்ற இவையும் காரணம் என்பதை மறுக்க முடியாது. அதிமுக அரசு இவற்றையெல்லாம் தாண்டும் அளவுக்கு ஆட்சி செய்து வந்தாலும் இந்தத் தடயங்களை எல்லாம்  மாற்றி புதிய நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்பதும் ஒரு சவாலே.

   mk and mks

   
 • இன்றைய நிலையில் திமுகவில் புதிதாய் சேரும் ஒரு சாதாரண இளைஞர் எந்த அளவுக்கு கட்சிக்குள் வளர முடியும் என்பது ஒரு கேள்வியே. அந்த அளவு கெட்டி தட்டிப் போய் இருக்கின்றன திமுகவின் அதிகாரச் சுவர்கள். தலைமை அளவில் வாரிசு அரசியல் என்ற விமர்சனம் ஒரு பக்கமென்றால், ஒவ்வொரு மாவட்டத்திலும் அது இருப்பதை கட்சியின் தொண்டர்களே மறுக்க மாட்டார்கள். ஜனநாயக முறைப்படி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும்  கட்சி என்ற பேர் இருந்தாலும்  பெரும்பாலான மாவட்டங்களில் பன்னெடுங்காலமாக மாவட்ட செயலாளர்கள் மாற்றமே இல்லாமல் இருப்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. அவர்களுக்கு அடுத்து இப்பொழுதே வாரிசுகள் வரிசையாக இருக்கின்றனர். ஸ்டாலின், பதினான்கு வயதில் கட்சிப் பணியைத் தொடங்கி, 23 வயதில் சிறை சென்றவர். அவர் மேல் இருக்கும் அதே பார்வை உதயநிதி மேல் இருக்காது. ஸ்டாலின் பிறந்தநாளன்று  தன் பேரனுடன் வந்து பெரியார் சமாதிக்கு மரியாதை செலுத்தியதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளலாம் என்றாலும், தலைமையிலிருந்து அடிமட்டம் வரை வாரிசு அரசியல் என்ற உணர்வைப் போக்குவது பெரும் சவால். 

   
 • சுற்றுப்புறச்சூழல், ஆறுகள் அழிவு, மலைகள் ஆக்ரமிப்பு என இயற்கை வளங்களை அழிப்பதில் தமிழகம் பின்தங்கிவிடவில்லை. ஆற்று மணலிலிருந்து இப்பொழுது எம்-சாண்ட் வரை எதிலுமே திமுக காரர்கள் இல்லை என்று சொல்ல முடியாது. இன்றைய இளைஞர்கள், இயற்கை விவசாயம், ஏரி,  குளங்கள் மீட்பு, மீத்தேன், நியூட்ரினோ எதிர்ப்பு என பலவகைகளில் சுற்றுச் சூழலை மீட்டெடுக்க முயல்கின்றனர். அதைப் பற்றி பேசுகின்றனர். அந்த வகையில் ஏரிகளை ஆக்கிரமிக்காமல், ஆறுகளை சுரண்டாமல் காக்கும், காடுகளை அழிக்காமல் வளர்க்கும் கட்சியாக திமுக மக்கள் மனதில் பதிய வேண்டுமென்பது ஒரு சவால்தான்.

   
 • இந்தி எதிர்ப்பு, ஆரிய எதிர்ப்பு என எதிர்ப்புகளை மட்டுமே எதிர்பார்ப்பவர்கள் அல்ல இன்றைய இளைஞர்கள். மாநிலத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பது முக்கியம்தான். அதைவிட முக்கியமாகக் கருதப்படும் பல விஷயங்கள் இருக்கின்றன. ஒரு தலைமுறையில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள், முன்னேறுவோம் என்றெண்ணி பெருகிப் போன  பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து இன்று வேலை வாய்ப்பில்லாமல் தவிக்கிறார்கள். தமிழகத்துக்கு வருவதாக இருந்த புதிய நிறுவனங்களோ நெல்லூருக்கும் விஜயவாடாவுக்கும் சென்றுவிட்டன. சுற்றுச்சூழலிலும் கீழே சென்று, தொழில்துறையிலும் கீழே செல்லும் தமிழ்நாட்டை மீட்க முறையான விவரமான  திட்டங்கள் வேண்டும்.

   mks

   
 • ஒரு பக்கம் சீமான், திருமுருகன் காந்தி என போராட்ட களத்திலும் மறுபக்கம் ரஜினி, கமல், விஜய் என நட்சத்திர வெளிச்சத்திலும் இளைஞர்கள் ஈர்க்கப்படுகின்றனர். இதையெல்லாம் தாண்டி அரசியல் சிந்தனை உள்ள இளைஞர்களை ஈர்க்க இன்னும் வீரியமான செயல்பாடுகள் தேவை. ஜல்லிக்கட்டு, நீட் என இளைஞர்கள் களத்துக்கு வந்துவிட்ட காலகட்டம் இது.சமீபமாக சீறினாலும், இடையில் பல தருணங்களிலும், 'பாயிண்ட் வரட்டும், பாயிண்ட் வரட்டும்' என்று பேசாமல் இருந்தது ஏமாற்றமே. முந்தைய தலைமுறை போல எந்தத் தயக்கமும் இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துப் பேசுவது, பன்னீர்செல்வத்துடன் ஒரே மேசையில் உணவருந்துவது என்று அரசியல் நாகரீகத்தில் அடுத்த கட்டத்தை எட்டியிருந்தாலும், அது வெறுமனே அதிகாரத்தில் இருபவர்களுக்கிடையேயான நல்லிணக்கமாக சுருங்கி விடாமல் மக்கள் பிரச்சனைகளில் எந்த அளவுக்கு பயன்படும் என்பதும் முக்கியம். 'நமக்கு நாமே' பயணத்தில் இளமைத் தோற்றம், சட்டசபையில் ஆவேசம் என எல்லாவற்றையும் மீம்ஸ் போடும் இந்தத் தலைமுறையின் பெரும்பான்மையை ஈர்ப்பது ஒரு பெரிய சவாலே.


பல சவால்களை பல விதங்களில் எதிர்கொண்டுதான் திமுக எனும் பேரியக்கத்தின் தலைவராகியிருக்கிறார் தளபதி ஸ்டாலின். அவற்றை விட சற்று கடினமான  இந்த சவால்களை வென்று திமுகவை வெற்றிக்கரை சேர்ப்பாரா? பார்ப்போம்.         


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்