![periyar m.r.radha](http://image.nakkheeran.in/cdn/farfuture/eRxfsruQGuAbJejp5j7xI8TPL8hFjRsqxPd_ml_ZMC0/1599109175/sites/default/files/inline-images/Periyar%20M.R.Radha_.jpg)
ஆன்மீகம், வரலாறு, உலக தத்துவம், ஜோதிடம், என பலதுறைகளில் தனக்கு இருக்கும் அனுபவத்தையும் நாம் கொண்டாடும் பிரபலங்களின் அறியாத பக்கங்களையும், அவர்களோடு தனக்கு இருந்த தொடர்புகள் பற்றியும் நடிகர் ராஜேஷ் அவர்கள் தொடர்ந்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் நடிகர் எம்ஆர் ராதா குறித்து பகிர்ந்து கொண்ட தகவல்களில் ஒரு பகுதி...
"இன்று எல்லா நடிகர்களும் 'கேரவன்' பயன்படுத்துகிறார்கள். தமிழ் சினிமாவில் அதை முதன்முதலில் செய்தவர் நடிகவேள் எம்ஆர் ராதாதான். எங்கள் பெரியப்பாவிடம்தான் அதை செய்ய ஆர்டர் கொடுத்திருந்தார். கேரவன் வேலை முழுவதுமாக முடிந்தபோது என் பெரியப்பா பெரியாரை எதார்த்தமாக சந்தித்திருக்கிறார். அவர் பெரியாரிடம் கேரவன் விஷயத்தை சொல்ல பெரியார் உடனே "அவனுக்கு எதுக்கு கேரவன்? எனக்குதான் வயசாகிருச்சு... எனக்கு அதைக் கொடு" என்றார். என் பெரியப்பா எம்.ஆர்.ராதா அண்ணனிடம் விஷயத்தை சொல்ல அவர் சரி நானே ஒரே விழாவில் வைத்து அவருக்கு பரிசாகக் கொடுத்து விடுகிறேன் என்றார். பின் சொன்னது போல அதை பெரியாருக்குப் பரிசாகக் கொடுத்துவிட்டார் ராதா அண்ணன்.
திராவிட இயக்கத்தின் பிரச்சார பீரங்கியாக இருந்த பட்டுக்கோட்டை அழகிரியின் இறுதி ஊர்வலம் ராதா அண்ணன் காரில் நடந்தது என்றால் நம்ப முடிகிறதா? அவர் இறப்பு செய்தி கேட்டு வந்தவர் தன்னுடைய காரின் மேற்பகுதியை கழட்டி எடுத்துவிட்டு காரையே பாடை போல மாற்றினார். காயம் பட்டவர்களை கூட காரில் சிலர் ஏற்ற மாட்டார்கள், இறந்த உடலை யாரும் ஏற்ற மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் வாகனத்தில் பன்றி மோதிவிட்டால் கூட வாகனத்தை விற்று விடுவார்கள். அப்படியெல்லாம் மூடநம்பிக்கைகள் இருந்த போது எதைப்பற்றியும் கவலைப்படாமல் அதைச் செய்தவர் அண்ணன் எம்.ஆர்.ராதா.
மிகப் பெரிய ஒளிவிளக்குகள், மிகப்பெரிய மேடை என பிரமாண்டமாக அந்த காலங்களில் மற்றவர்கள் மேடை நாடகம் போட்டுக் கொண்டிருந்த போது எளிமையான மேடையில் தன்னுடைய திறமையால் அனைவரையும் ரசிக்க வைத்தார். அந்தக் காலகட்டங்களில் எல்லாம் அவருடைய லட்சுமிகாந்தன், ரத்தக்கண்ணீர் போன்ற நாடகங்கள் அவ்வளவு புகழ் பெற்றவை. வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் பகுத்தறிவு மற்றும் நாத்திகக் கருத்துகளை பேசிவந்தார்."
எம்.ஆர்.ராதா குறித்து பல அரிய தகவல்களை நடிகர் ராஜேஷ் வீடியோவில் பகிர்ந்துள்ளார். கண்டு மகிழுங்கள்...