பரபரப்பாக மூன்று நாட்களாக நடைபெற்று கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்னும் முடியவில்லை. நெவாடா, பென்சில்வேனியா, ஜார்ஜியா, விஸ்கான்சின், மிச்சிகன் உள்ளிட்ட மாகாணங்களில் தற்போதுவரை வாக்கு எண்ணிக்கை இழுபறியாகவே இருக்கிறது. தற்போதைய சூழலில் ஜோ பைடன் 264 எலோக்டரல் காலேஜ் வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். ஆனால், வாக்கு எண்ணிக்கை முற்றிலுமாக முடியும் தருவாயில் தேர்தல் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம், வெற்றி யாருடனும் கைகோர்த்து நிற்கலாம்.
இப்படியான இழுபறிக்கும், இழுத்துக்கொண்டே செல்லும் வாக்கு எண்ணிக்கைக்கும் ஒரே காரணம் என்றால் தபால் வாக்குகள்தான். கரோனா அச்சுறுத்தலால் உலகமே பீதியில் இருந்தபோது, அமெரிக்காவின் அதிபர் அதை அசால்ட்டாகவே கையாண்டார். அதற்கு பலனாக அமெரிக்கா கரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்காவுக்கு இது கண்டிப்பாக ஒரு சாதனை அல்ல, சோதனையே. இந்தமாதிரியான சூழ்நிலையில் அமெரிக்க தேர்தலும் இன்றியமையாத ஒன்றாக இருப்பதால் தபால் வாக்குகள் பதிவிடுவது அக்டோபர் முதல் வாரமே பெரும்பாலான இடங்களில் தொடங்கப்பட்டது. இதன் முடிவாக சுமார் 10 கோடிக்கும் மேலானோர் முன்கூட்டியே வாக்குகளை செலுத்தினார்கள். கடந்த 2016ஆம் தபால் வாக்கு செலுத்தியவர்கள் எண்ணிக்கை வெறும் 4 கோடியே 7 லட்சம் பேர்தான்.
அமெரிக்க தேர்தலில் வாக்குச் சாவடிக்கு நேரில் சென்று வாக்கு செலுத்துபவர்களின் வாக்குகளையே முதன்மையாக எண்ணுவார்கள். தபால் வாக்கு எண்ணிக்கையை இரண்டாம் கட்டமாகதான் எண்ணுவார்கள். இதனால்தான் அமெரிக்க தேர்தல் முடிவை தெரிந்துக்கொள்ள இவ்வளவு கால நேரம் எடுத்துக்கொண்டே செல்கிறது. தற்போதைய அதிபராக இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் தபால் வாக்குகளை எண்ணக்கூடாது என்று ஆரம்பத்திலிருந்து தெரிவித்து வருகிறார். அதற்கு காரணமும் அவரே, ரிபப்பிளிக்கன் கட்சி சார்பில் போட்டியிடும் ட்ரம்பின் பிரச்சாரத்தில், தபால் வாக்கு என்பது சட்ட விரோதமானது, நீங்கள் அனைவரும் நேரில் சென்றுதான் வாக்கு செலுத்த வேண்டும் என்று மக்களுக்கு கரோனா அச்சுறுத்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் முட்டாள்தனமாக பிரச்சாரம் செய்தார். அவருடைய அறிவியல் திறன் தான் உலகமே அறியுமே!
மறுபுறம் டெமொக்ரெட்ஸ் சார்பாக போட்டியிட்ட ஜோ பைடனின் பிரச்சாரத்தில் ஒவ்வொரு முறையும், கரோனா பரவலை சாதாரணமான ஒன்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம், தபால் வாக்கு மூலமாகவே முடிந்தவரை வாக்கு செலுத்துங்கள் என்று கோரிக்கை வைத்து பிரச்சாரம் செய்தார். இதன் பலனாக அமெரிக்க தேர்தலில் செலுத்தப்பட்ட தபால் வாக்குகளில் 90 சதவீதத்திற்கும் மேலான வாக்குகள் டெமொக்ரெட்ஸ் கட்சியினர் போட்டதாக சொல்லப்படுகிறது. அதிலும் குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழைவர்க்க பெண்கள், பல்வேறு அச்சுறுத்தல்கள் காரணமாக தேர்தல் மையங்களுக்கு சென்று வாக்களிக்க முடியாத கறுப்பின மக்கள் உள்ளிட்ட ட்ரம்ப் கட்சியினரால் கண்டுகொள்ளப்படாத பல்வேறு தரப்பினரின் வாக்குகள் தபால் வாயிலாக பைடனுக்கே சென்றிருக்கும் என்பது பைடன் மற்றும் ட்ரம்ப் இருவருக்குமேயான நம்பிக்கை.
தபால் வாக்குகளின் நற்பலன் என்பது பைடனின் வெற்றிக்கே உறுதுணையாக இருக்கும் என்பதே ட்ரம்பின் தற்போதைய அச்சத்திற்கும், அதனையடுத்து அவர் மேற்கொண்டுவரும் அரசியல் மாண்பற்ற சில செயல்களுக்கும் அடித்தளமாய் அமைந்துள்ளது. கரோனாவின் தாக்கத்தால் இதுவரை இல்லாத அளவுக்கு அதிபர் தேர்தலில் தபால் வாக்குகள் பதியப்பட்டிருக்கும் சூழலில், இதுவே அதிபர் வெற்றியாளரை தேர்ந்தெடுப்பதில் மிகப்பெரிய பங்காற்றும் என்பதே இத்தேர்தலில் தபால் வாக்குகளின் முக்கியத்துவத்தை பன்மடங்கு அதிகரித்துள்ளது.