தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. இதனையடுத்து, மிசோரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற்றது.
அதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், கடந்த 4 ஆம் தேதி மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், ஸோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
இந்த நிலையில் தெலுங்கானாவில் நேற்று முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. மாநிலத்தின் முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை தொடர்ந்து சில அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். அப்போது, சீதாக்கா என்பவர் அமைச்சராக பதவியேற்கும் போது, அரங்கமே அதிரும் அளவிற்கு பாகுபலி படத்தில் வருவதை போல அனைவரும் ‘சீதாக்கா...சீதாக்கா.. என்று கோஷம் எழுப்பியது, பலரையும் யார் இவர் என்று பலரும் கூகுளில் தேட வைத்துள்ளது.
கடந்த 1971 ஆம் ஆண்டு சத்தீஸ்கரின் எல்லையான முலுகுவில் உள்ள ஜக்கண்ணபேட்டாவில் பிறந்தார் தன்சார் அனசூயா என்ற சீதாக்கா. பழங்குடி வகுப்பை சேர்ந்த இவர், தனது 14 வயதில் ஜனசக்தி நக்சல் இயக்கத்தில் சேர்ந்தார். ஆயுதம் ஏந்தி நக்சல் போராளியாக போராட்டத்தில் ஈடுபட்ட சீதாக்கா, 1994ஆம் ஆண்டில் நக்சல் இயக்கத்தில் இருந்து விலகி பொது மன்னிப்பு பெற்றார். பின்பு சீதாக்கா சட்டப்படிப்பை படித்து முடித்து வழக்கறிஞராக இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த சீதாக்கா, அப்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், முலுக் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ஆனால் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏவானார்.
இதைத் தொடர்ந்து 2014 தேர்தலில் மீண்டும் தோல்வி அடைந்த சீதாக்கா, 2017 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏவான அவர், தெலங்கானாவின் மகிழா காங்கிரஸின் பொதுச்செயலாளராக பணியாற்றியிருக்கிறார். இந்த காலகட்டத்தில் கொரானா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்கள் பலருக்கு நிவாரண பொருட்களை தலையில் சுமந்து சென்று உதவியுள்ளார். மேலும் தனது தொகுதி மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்து மக்களின் ஆதர்ச நாயகியாகவே வலம் வந்துள்ளார். இதனிடயே 2022 ஆம் ஆண்டு ‘அரசியல் அறிவியலில்’ முனைவர் பட்டம் பெற்றார்.
இந்த நிலையில்தான் தற்போது நடந்து முடிந்த தேர்தலிலும் வெற்றி பெற்று மாநிலத்தின் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் தமிழிசை பதவி பிரமாணம் செய்ய அழைத்த போது. அவரின் பெயரை கேட்டவுடனே அரங்கத்தில் இருந்த பலரும் சீதாக்கா... சீதாக்கா என்று கோஷம் எழுப்ப அரங்கமே அதிர்ந்தது.