Skip to main content

யார் இந்த சித்தாண்டி... ஒரே ஊரில் 12 நபர்கள் ஒரே தேர்வில் வெற்றி? டி.என்.பி.எஸ்.சியில் நடந்த வெளிவராத அதிர்ச்சி ரிப்போர்ட்! 

Published on 03/02/2020 | Edited on 03/02/2020

கார்ப்பரேட்மயமான உலகில், அரசாங்கத்தின் விமானமான ஏர் இந்தியாவையே முழுமையாக விற்று நிலைமையைச் சமாளிக்க வேண்டிய யுகத்தில், படித்த இளைஞர்களுக்கு மிச்சமிருக்கும் ஒரே நம்பிக்கையான வாய்ப்பு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் பொதுத் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி). அந்த நம்பிக்கையை சிதறடித்து, தமிழக இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தைப் பாழடிக்கும் அனைத்து வேலைகளும் நடந்துகொண்டிருப்பது மெல்ல மெல்ல அம்பலமாகியுள்ளது.

குரூப் 4 மாபெரும் முறைகேட்டை தொடர்ந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.யில் குரூப் 1, குரூப் 2, குரூப் 2ஏ உள்ளிட்ட அரசுத் தேர்வுகளில் தமிழகம் முழுக்க நடந்த முறைகேடுகள் அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. ராமநாதபுரத்தில் நடந்த குரூப் 4 தேர்வுமுறைகேட்டில் கைதான டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் ஓம்காந்தன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தேடப்பட்டு வருகிறார் புரோக்கர் ஜெயக்குமார். மேலும், டி.என்.பி.எஸ்.சி. உயரதிகாரிகளுக்கு டிரைவராக இருந்த போலீஸ் சித்தாண்டியும் இந்த முறைகேட்டில் சிக்கியிருக்கிறார்.

 

incident



யார் இந்த சித்தாண்டி? 

குரூப் 4 தேர்வில் முறைகேடாக மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்ற சிவகங்கை மாவட்டம் பெரிய கண்ணனூரைச் சேர்ந்த திருவராஜின் ஊரைச்சேர்ந்தவர்தான் சித்தாண்டி. இவர் மூலம்தான் திருவராஜ் உள்பட பல தேர்வர்கள் குரூப் 4 தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்றிருப்பது அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து, நாம் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

சித்தாண்டியின் மனைவி சண்முகப்பிரியா குரூப் 2ஏ தேர்வில் தேர்ச்சி பெற்று, தலைமைச்செயலகத்தில் வருவாய்த்துறையில் (சி.ஆர்.ஏ.) பணியாற்றி வருகிறார். சித்தாண்டியின் தம்பி வேல்முருகனும் குரூப் 2ஏ தேர்வில் தேர்ச்சி பெற்று, காரைக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். வேல்முருகனின் உறவினர் இளங்கோவனும் குரூப் 2ஏ தேர்வில் தேர்ச்சி பெற்று சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணி புரிந்து வருகிறார். சித்தாண்டியின் மற்றொரு தம்பி கார்த்திகைசாமி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர்கள் அனைவருமே சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேர்வு மையத்தையே தேர்ந்தெடுத்து தேர்ச்சி பெற்று அரசுப்பணியில் நுழைந்திருக்கிறார்கள். சித்தாண்டியால் வேறு பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் ராமநாதபுரத்தில் தான் தேர்வு எழுதினர்.

 

siddhaandi



இதில் குரூப் 2ஏ பதவிகளுக்கு 13 லட்சத்தில் இருந்து பதினைந்து லட்சம் வரையிலும் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற 10 லட்சத்திற்கு மேலும், லஞ்சம் விளையாடியிருக்கிறது. இவர் மூலம் 200-க்கும் மேற்பட்டவர்கள் முறைகேடாக அரசுப்பணியில் சேர்ந்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் தொடர்பு? 

தனக்குத் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சுதனை தெரியும் என்று சித்தாண்டி லட்சக்கணக்கில் வசூல் வேட்டை நடத்திய அதிர்ச்சிகரமான தகவலும் வெளியாகியுள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்பே குரூப் 2 தேர்வில் தேர்வு பெற 7 லட்ச ரூபாய் என வசூலித்திருக்கிறார் சித்தாண்டி. குரூப் 4 தேர்வு முறைகேட்டில் விசாரணையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் மீதே குற்றச்சாட்டு எழுந்திருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் சுதனுக்கு நேரடித் தொடர்புள்ளதா, அவர் பெயரை சித்தாண்டி பயன்படுத்தி மோசடி செய்தாரா என்ற கோணத்திலும் விசாரணையை தொடங்கியிருக்கிறது சி.பி.சி.ஐ.டி. போலீஸ்.


 

 

tnpsc



சென்னையில் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றிய சித்தாண்டி, ஐ.பி.எஸ். அதிகாரிகள், டி.என்.பி. எஸ்.சி. அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு டிரைவராக பணியாற்றியிருக்கிறார். அதில் கிடைத்த நட்பை பயன்படுத்தித்தான் அரசுப் பணியில் சேர்வதற்கு லஞ்சம் வாங்கிக்கொடுத்து, பலரையும் தேர்ச்சி பெற வைத்திருக்கிறார். அழியும் மை கொண்ட மேஜிக் பேனா கொடுத்து ஜெயக்குமார் மூலம் விடையை நிரப்பியது என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதைதான். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் குரூப் 1 மோசடி போல வினாத்தாள் முன்கூட்டியே லீக் அவுட் செய்யப்பட்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லை என்றால், டி.என்.பி. எஸ்.சி. உறுப்பினர்களின் துணையுடன் விடைத்தாளை எடுத்து மீண்டும் சரியான விடைகளை நிரப்பி வைத்திருக்க வேண்டும் என்ற கோணத்தில்தான் விசாரணையை கொண்டு செல்கிறது சி.பி.சி.ஐ.டி. போலீஸ். 


குரூப் 2 முறைகேட்டில் சிக்கும் தேர்வர்கள் 

சித்தாண்டியைப் போலவே காவல்துறை யைச் சேர்ந்தவர் மாசாணம். உதவி ஜெயிலர் பணியில் தேர்ச்சி பெற்று, பிறகு குரூப் 2 தேர்விலும் தேர்ச்சி பெற்று மதுரையில் சார்பதிவாளருக்கான பயிற்சியில் இருக்கிறார். அவருடைய தம்பி முனியாண்டி, 2016ஆம் ஆண்டில் குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றார். பிறகு, 2018ஆம் ஆண்டில் டி.என். பி.எஸ்.சி உதவி ஜெயிலர் தேர்வில் தேர்ச்சியாகி பதவி பெற்றார். கைதிகளுடன் மது அருந்தியதாக புகார் எழுந்து, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மாசாணத்தின் மனைவி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று பொதுப்பணித்துறையில் பணியாற்றி வருகிறார். முனியாண்டியின் நண்பர் முனீஸ்வரன், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை உதவியாளராக இருக்கிறார். மாசாணமும் முத்துராஜுவும் குடும்ப நண்பர்கள். ஒரே கல்லூரியில் பி.எஸ்.சி. கெமிஸ்ட்ரி படித்தவர்கள்.
 

 

tnpsc



2018 குரூப் 4 தேர்வில் முத்துராஜுவின் மனைவி, மாசாணத்தின் மனைவி, முனியாண்டியின் மனைவி ஆகியோர் தேர்ச்சி பெற்றிருப்பதால், இவர்களிடம் விசாரணை நடத்தினாலே, இவர்களைப்போல 70-க்கும் மேற்பட்டவர்கள் முறைகேடாக தேர்ச்சி பெற்றிருப்பது வெளிச்சத்திற்கு வரும் என்றவர்களிடம், முறைகேடாக தேர்ச்சி பெற்றது எப்படி? என்று கேட்டோம்.

குரூப் 2 தேர்வுக்கு முந்தைய நாளில் 15 கேள்விகளுக்கான விடையை கேட்டு ஒரு ஆர்.ஐ.க்கு மெசேஜ் அனுப்புகிறார்கள். அதே போல் இன்னொரு 15 கேள்விகளை கோ ஆப ரேட்டிவ் சொசைட்டி இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு அனுப்பி விடையை கேட்டிருக்கிறார்கள். அவர்களும் எதார்த்தமாக அதற்குரிய பதில்களை அனுப்பியிருக்கிறார்கள். ஆனால், இந்த கேள்விகள் அனைத்தும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வில் கேட்கப்பட்டதுதான் அதிர்ச்சியை உண்டாக்கியது. இத்தனை முறைகேடுகளுக்கும் புரோக்கர்களாக காவல் துறையைச் சேர்ந்தவர்களே இருந்திருக்கிறார்கள்.

கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த குரூப் 2 தேர்வில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமாபுரம் (கிழக்கு) கிராமத்தில் ஒரே ஊரை சேர்ந்த 12 நபர்கள் முறைகேடாக தேர்வாகி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்த 12 நபர்களும் தேர்விற்கு முன்பே வினாத்தாள் பெற்று தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் என்று குற்றம்சாட்டுகிறார்கள். ஒரு குடும்பத்திற்கு இருவர் என மூன்று குடும்பத்தில் மட்டும் 6 நபர்கள் தேர்வாகி உள்ளனர். இதுகுறித்து 12 பேர்களில் ஒருவரான வெற்றிச்செல்வனை தொடர்புகொண்டு, ஒரே ஊரில் 12 நபர்கள் ஒரே தேர்வில் தேர்ச்சி பெற்றது எப்படி?’’ என்று நாம் கேட்டபோது, ஒரு நிமிடம் அப்படியே அமைதியாக இருந்தவர், போனை துண்டித்துவிட்டார். மறுபடியும் போன் செய்தபோது, போனை அட்டண்ட் செய்யவில்லை.

சென்னை ஆயுதப்படையில் காவலராக இருந்த சித்தாண்டி சிவகங்கை மாவட்டம் பெரிய கண்ணனூரை சேர்ந்தவர். இவருடைய அப்பா காட்டுராஜா அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். அதுபோக அமைச்சர்கள் சிலரின் நெருக் கத்திற்கு உரியவரும் கூட..! இந்தத் தொடர்புகள் மூலமே தற்பொழுது மைலாப்பூர் எம்.எல்.ஏ.வும், முன்னாள் டி.ஜி.பி. மற்றும் டி.என்.பி.எஸ்.சி. தலை வராக இருந்தவருமான நடராஜனின் அறிமுகம் கிடைத்தது. இதனால் நடராசனின் பி.எஸ்.ஓ. வாகப் பணியாற்றி வந்தார். டிரைவராகவும் இருந் திருக்கிறார். தற்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் பி.எஸ்.ஓ.வாக உள்ள சித்தாண்டி, ராமச்சந்திரா மருத்துவமனை யில் அட்மிட்டாகியுள்ள நிலை யில், "அவரைக் கைது செய்து விசாரித்தால் மட்டுமே பல பெருந்தலைகள் உருளும். கைது நடவடிக்கைக்குள் சித்தாண்டிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் இருக்கவேண்டும்' என்கிறார் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் வழக்கறிஞர் பாஸ்கர் மதுரம். 

சித்தாண்டியைத் தேடிய சி.பி.சி.ஐ.டி. 

சி.பி.சி.ஐ.டி. புதன்கிழமையன்று இன்ஸ்பெக் டர் சேகர் தலைமையில் நான்கு பேர் கொண்ட டீமோடு சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணனூ ரிலுள்ள சித்தாண்டி வீடு உள்பட பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், காரைக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணி புரியும் அவரது தம்பி வேல்முருகனை கைது செய் தது. அதே வேளையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 99 தேர்வர்கள் தவிர, சிவகங்கை மஜீத் ரோட்டி லுள்ள ஒரு வீட்டில் இருவர் குரூப் 4 தேர்விலும், அண்ணாமலை நகரில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 4 நபர்களும் குரூப்4 தேர்வில் வெற்றிபெற்றதும் சி.பி.சி.ஐ.டி.க்கு தெரியவர அவர்களும் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளனர். 

ஏ.எஸ்.ஓ.வை மறைக்கும் டி.என்.பி.எஸ்.சி. 

டி.என்.பி.எஸ்.சி.யில் செயலாளர் தவிர தலைவர், உறுப்பினர் என 11 பதவிகளுக்கான நபர்களை ஆளுங்கட்சியினரே நியமிப்பார்கள். இதில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி அருள்மொழி தலைவராகவும், கிருஷ்ணகுமார், சுப்பிரமணியன் மற்றும் பாலுச்சாமி ஆகியோரை உறுப்பினர்களாக வும் நியமித்த ஆளும் அரசு... மீதமுள்ள 7 நபர் களை நியமிக்கவில்லை. தவறுக்கு உடந்தையாக இவர்கள் இருக்கலாம் என்றாலும், தேர்வு நடை பெறும் பொழுது குரூப் 2 கேடர் அலுவலரான ஏ.எஸ்.ஓ. தலா ஒருவர் ஒரு மாவட்டத்திற்கு செல்ல வேண்டும். இவர்கள் அந்தந்தப் பகுதிகளின் கட்டுப்பாட்டு அதிகாரிகள். இவர்கள் இல்லாமல் தேர்வே நடைபெறாது.

மொத்தம் 40 ஏ.எஸ்.ஓ. க்கள் இருக்கும் டி.என்.பி.எஸ்.சி.யில் ராமேஸ்வரம் பகுதிக்கு சென்ற ஏ.எஸ்.ஓ. யார்..? என்ற கேள்விக்கு இன்று வரை விடை அறியப்படவில்லை என்கின்றனர் விபர மறிந்தவர்கள். 

கண்காணிப்பில் சங்கரன்கோவில் 

குறிப்பிட்ட சமூகத்தினரை ஆரம்பக்கட்டங் களில் வளைக்கும் சித்தாண்டியால் பணம் கொடுத்து முறைகேடாக வாழ்க்கை பெற்றதில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் வடக்கு புதூர், பாஞ்சாங்குளம், பொய்கை மேடு, வீரிருப்பு, புன்னையாபுரம் ஆகிய கிராமங்களை சார்ந்த ஒரே சாதியினர் பலர் இராமேஸ்வரம், கீழக்கரை சென்டர்களில் குரூப் 2 தேர்வு எழுதி பாஸ் செய்து, தற்பொழுது பணியில் உள்ளதை அறிந்த சி.பி.சி.ஐ.டி, சங்கரன்கோவில் பகுதிகளை கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், "சித்தாண்டி உங்களிடம் டிரைவராக பணியாற்றினாரா?'’என்று டி.என். பி.எஸ்.சி. முன்னாள் தலைவரும் காவல்துறை டி.ஜி.பி.யும் மயிலாப்பூர் எம்.எல்.ஏ.வுமான நடராஜிடம் தொடர்புகொண்டபோது, பணி யாற்றவில்லை என உறுதியாக மறுத்தார். துறையின் அமைச்சர் ஜெயக்குமாரும் உயரதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்திவிட்டு, ஒன்றிரண்டு மையங்களில் மட்டும்தான் முறைகேடு என்றும் மறுதேர்வு நடத்தத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

குரூப் 4 முறைகேட்டை தொடர்ந்து 2016-ல் நடந்த குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கை தீவிரமாக விசாரிக்க இருக்கிறது நீதிமன்றம். குரூப்4 முதல் குரூப் 1 வரை அனைத்து மட்டங்களிலும் டி.என்.பி.எஸ்.சி.யில் ஊழல் நடந்திருக்கும் நிலையில், இதன் தாக்கம் கோட்டை வரை உள்ளது. டி.என்.பி.எஸ்.சி.யின் உயர்பதவி நியமனங்கள் அனைத்தும் கோட்டை யில்தான் முடிவாகின்றன. இந்தப் பதவிகளுக்கான போட்டியும் அதில் உள்ள ஆளுங்கட்சி அரசியலும் காலம் காலமாகத் தொடரும் நிலையில், கோட்டையில் இருப்போரின் ஆதரவுடன்தான் மோசடி நடந்துள்ளதா, யாருக்கு எவ்வளவு பங்கு போனது என்பது தெரிந்தால்தான் முழு உண்மை வெளியாகும்.

சீனாவை சீரழிக்கிறது கொரோனா வைரஸ். தமிழ்நாட்டை சீரழிக்க அத்தகைய ஆபத்து தேவையில்லை. கோட்டையின் ஆதரவுடன் செயல்படும் டி.என்.பி.எஸ்.சி.யே போதும்.