பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கியுள்ள 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் நேற்று வெளிவந்துள்ளது. இதுவரை வெளிவந்த சாதிய பிரிவினைகள், கொடுமைகளுக்கு எதிரான படங்களிலிருந்து பல வகைகளில் வேறுபட்டிருக்கிறது பரியேறும் பெருமாள். ஏன், அதன் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் இயக்கிய படங்களுக்கும் இதற்குமே ஒரு மெல்லிய, வலிய வித்தியாசம் உண்டு. மிகுந்த கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது இந்தத் திரைப்படம்.
மாரி செல்வராஜ், ஒரு எழுத்தாளராக முன்பே கவனம் ஈர்த்தவர். இயக்குனர் ராமின் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இவர் 'கற்றது தமிழ்' திரைப்படத்தில் ஒரு காட்சியில் 'ஜார்ஜ்' என்ற பெயரை 'சார்ஜ்' என்று சொல்லும் மாணவராக வருவார். பின்னொரு நாள், விஜய் அவார்ட்ஸ் மேடையில் தன் 'தங்கமீன்கள்' படத்தில் நடித்த குழந்தை சாதனாவுக்காகப் பேசியபோது, மாரி செல்வராஜை மேடைக்கு அழைத்து 'ஆனந்த யாழை' பாடலை பாடவைத்தார். இப்படி பல தருணங்களில் மாரி செல்வராஜ் தனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர் ராம். அதே போல தான் பேசிய அனைத்து மேடைகளிலும் பேட்டிகளிலும் இயக்குனர் ராம் தன் வாழ்க்கையில் நிகழ்த்திய மாற்றங்கள் குறித்து சிலாகித்திருக்கிறார் மாரி. முதலில் 'கற்றது தமிழ்' அலுவலகத்தில் ஆஃபிஸ் பாயாக சேர்ந்து பின்னர் உதவி இயக்குனராக, எழுத்தாளராக உருவெடுத்த மாரி செல்வராஜிடம் இன்னும் நூறு கதைகள் இருக்கிறதாம்.
'தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்'... இது மாரி செல்வராஜின் சிறுகதைத் தொகுப்பு. இதில் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு நடத்திய போராட்டத்தில், தொழிலாளர்களை தாமிரபரணி ஆற்றில் ஓடவிட்டு சுட்டுக் கொன்ற அரசின் அடக்குமுறையை அதில் கலந்துகொண்டவர்களின் உணர்வாக, பிழைப்பை எதிர்பார்த்து சென்று மரணத்தை பெற்று வந்த கதையை ஆழமாகப் பதிவு செய்துள்ளார். அதே தொகுப்பில், பட்டியலினத்தில் இருக்கும் சாதிகளுக்குள்ளேயே நிலவும் ஏற்றத்தாழ்வுகளையும் நேர்மையாகப் பதிவு செய்தார். இந்த நேர்மை 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்திலும் இருக்கிறது. அதுதான் இன்று அனைவர் மத்தியிலும் மறுக்க முடியாத படமாக இதைக் கொண்டு செல்கிறது.
சாதி ஒடுக்குமுறை தாண்டி, சட்டக் கல்லூரி பாடத்திட்டம், தமிழ் வழி கல்வி பயின்ற மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கியிருப்பவர்களும் கூட சாதியை சுமந்துகொண்டிருப்பது என பல விஷயங்களைப் பேசியுள்ளார். பரியேறும் பெருமாளின் தந்தை கிராமிய நடனக் குழுவில் பெண் வேடமிட்டு நடனமாடுபவர். நடனத்தின் போது அவரது ஆளுமையும், நடனம் முடிந்த வெளியுலகில் அவரது கூச்சமும், வெளியுலகிலிருந்து தன்னைப் பிரித்துக்கொண்டு குறுகி வாழ்வதும் என தமிழ் சினிமாவில் இதுவரை பார்க்காத ஒரு உண்மை பாத்திரத்தை தீவிரமாகப் படைத்துள்ளார். அவர் அவமானப்படுத்தப்படுவதும், அந்த சம்பவம் குறித்து அவரது மனைவி, "இதென்ன புதுசா" என்று விளக்கும் காட்சியும் நாம் இதுவரை உணராத அதிர்வை நம் மனதில் உண்டாக்குகிறது.
அனைத்தையும் தாண்டி 'பரியேறும் பெருமாள்' பாத்திரத்தின் தவிப்பு, துடிப்பு, பக்குவம் படம் முடியும்போது அழுத்தமாகப் பதிகிறது. 'வன்மத்துடன் திருப்பியடிப்பதல்ல, உன்னைப் போல நானும் ஒரு மனிதன்தான், சமமாக வாழவேண்டும் என்பதே என் நோக்கம்' என்று சொல்லாமல் சொல்வதே இன்னொரு மனிதனை இழிவாக எண்ணும் ஒவ்வொருவரையும் கூச வைக்கிறது. மகளைக் காதல் செய்பவரை கொலை செய்ய ஒருவரை அணுகுகிறார்கள். "அந்தப் பையனா, நல்ல பையனாச்சேப்பா பேசிப் பாப்போமா?" என்கிறார் அவர். பின்னர் "பணமெல்லாம் வேண்டாம், இதை நம்ம குலசாமிக்கு செய்ற கடமையா செய்றேன்" என்று ஒப்புக்கொள்கிறார். இன்னொரு காட்சியில் "டேய்... என் பொண்ணுகிட்ட இருந்து விலகி இருடா, அவய்ங்க உன்னோட சேர்த்து என் புள்ளையையும் கொன்றுவாய்ங்கடா" என்கிறார் தந்தை. தங்களுக்கு விருப்பமோ இல்லையோ சாதி உணர்வு ஒரு வலையாக எப்படி சூழ்ந்திருக்கிறது, தர்க்கங்கள் குறித்து சிந்திக்காமல் அதனுள் இவர்கள் உறுதியாக நிற்பதை சொல்லியிருக்கிறார் மாரி.
படத்தில் இடம்பெற்றுள்ள மிக தீவிரமான இந்த வசனங்களைக் கொண்டே புரிந்துகொள்ளலாம் பரியேறும் பெருமாள் பேசும் சமூக நீதியை.
"எங்கப்பா செருப்பு தைக்கிறவரு, அதை சொல்லிச் சொல்லியே என்னை மேல வர விடாம மிதிச்சாய்ங்க... எல்லா வலியையும் சேர்த்து பேய் மாதிரி படிச்சேன். இன்னைக்கு நான் உனக்கு பிரின்சிபால். இப்போ அவுங்க எல்லோரும் எனக்கு வணக்கம் வைக்கிறாய்ங்க..." - பரியேறும் பெருமாள் படத்தில் சட்டக் கல்லூரி முதல்வர் பாத்திரம் பேசும் இந்த வசனம் ஒடுக்கப்பட்டோருக்கான வழிகாட்டல்...
"காலம் இப்படியேவா தம்பி இருக்கும்... நல்லா படிச்சு முடிங்க. ஒரு நாள் எல்லாம் மாறும்ல... அப்போ பார்ப்போம். இப்போதைக்கு என்னால இதுதான் சொல்ல முடியும்" - ஒரு ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த தந்தை தன் மகளின் நண்பனான ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞனிடம் பேசும் இந்த வார்த்தைகள் குற்ற உணர்வுடன், அதே நேரம் மாற்றத்துக்குத் தயாராக இருக்கும் பலரின் வாக்குமூலம்
"இதுக்கு காசெல்லாம் வேணாம். நம்ம குலசாமிக்கு செய்ற கடமையா இதை செய்றேன். ஏதாவது தப்பாப் போனா மட்டும் இதை வச்சு என்னை வெளிய எடுத்து விடு" - ஆணவக் கொலை செய்யப்போகும் ஒருவர் சொல்லும் இந்த வார்த்தைகள் காரணத்தை யோசிக்காமல் கெட்டி தட்டிப் போன சாதீய மனங்களின் பிரதிபலிப்பு
"பரியேறும் பெருமாள் என்பது எங்கள் சாமியின் பெயர். அந்தப் பெயர் எனக்கு ரொம்பப் பிடிக்கும். எனக்கு அந்தப் பெயர் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமென்று நான் நினைப்பேன். அதனால்தான் என் நாயகனுக்கு இந்தப் பெயர். நான்தான் அவன்" என்று கூறியிருக்கிறார் மாரி செல்வராஜ். மாரி என்னும் பரியன் பேசியிருக்கும் பேசாப் பொருள்கள் எக்கச்சக்கமாக இருக்கின்றன இந்தப் படத்தில்!